மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகக் குழுவுக்கு: பழைய பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடப்பதால்..தன்னலமற்றவரே தேவை
தேசிய அளவில் ஜனாதிபதி, மாநில அளவில் ஆளுனர்கள், மாவட்ட அளவில் கலெக்டரை தலைவராகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. வெள்ளம், தீவிபத்து உட்பட பேரிடர் காலங்களில் இதன் சேவை மகத்தானது. இச்சங்கத்தை நிர்வகிக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சேர்மன், துணை சேர்மன், பொருளாளர், செயலாளர், உறுப்பினர்கள் என 10 பேர் குழுவை தேர்தல் மூலம் தேர்வு செய்வர். தேர்தல் ரத்து ஏன் மதுரை மாவட்டத்தில் இச்சங்கத் தேர்தல் 2021 ல் நடந்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் போலியான ஆட்கள் பலரை சேர்த்து முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விசாரித்த அப்போதைய கலெக்டர் அனீஷ்சேகர் தேர்தலை ரத்து செய்து, காரணமானோர் எனக்கருதியவர்களை வெளியேற்றினார். பின் 2 ஆண்டுகள் நிர்வாக குழு இன்றி ஏனோதானோவென்று செயல்பட்டது. 2023ல் ராஜ்குமார் என்பவரை செயலாளராக நியமித்தார். அதன்பின் தற்போது வரை பள்ளி, கல்லுாரிகள், தெருமுனைகளில் 250க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிரசாரங்கள், தெருக்களில் ஆதரவற்றோர் மீட்பு நடந்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல், ரத்ததான முகாம் நடத்தி ஆண்டுக்கு 600க்கும் மேற்பட்ட ரத்த யூனிட்டுகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கல் என செயல்பட்டு வருகிறது. பொதுச்சேவையில் ஆர்வமுள்ள முக்கிய பிரமுகர்களை இதன்நிர்வாக குழு சேர்மனாக தேர்வு செய்ய வேண்டும் என்பதால் தேர்தல் நடத்த பலரும் ஆர்வம் காட்டினர். மாநில அளவில் 6 மாவட்டங்களில் தேர்தல் நடக்காமல் இருந்ததால் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தி நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கண்காணிப்பு அவசியம் மதுரை மாவட்டத்தில் செப்.6ல் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பழைய உறுப்பினர்கள் பட்டியலின் அடிப்படையில் 1667 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இத்தேர்தலில் கோயில் அறங்காவலர் குழுவைப் போல பொதுநலவாதிகளை தேர்வு செய்ய வேண்டும். திருத்தம் இன்றி, பழைய உறுப்பினர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடப்பதால், போலி வாக்காளர் முறைகேடு தொடர்புள்ளோரும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. அரசால் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனத்திற்கு கலெக்டரின் கண்காணிப்பிலேயே தன்னலமற்றவரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.