மக்களின் வரலாறே வரலாறு மற்றவை வாய்க்கால், வரப்பு தகராறு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தகவல்
திருப்பரங்குன்றம், : ''மக்களின் வரலாறு தான் உண்மை வரலாறு. மற்றதெல்லாம் வாய்க்கால், வரப்பு தகராறு,'' என, மதுரையில் நடந்த தமிழ்நாடு வரலாற்று பேரவை மாநாட்டில் சிந்துச் சமவெளி நாகரீகம் ஆய்வாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணன் பேசினார்.மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த தமிழ்நாடு வரலாற்று பேரவை மாநாட்டின் இறுதி நாளான நேற்று தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, பேரவை தலைவர் வெங்கட்ராமன், பொது செயலாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பிறையா வரவேற்றார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணன் பேசியதாவது: ஆதிச்சநல்லுார் அகழாய்வை மேற்கொண்ட ஆய்வாளர், நீதிமன்ற தலையீட்டுக்கு பின்பே முடிவுகளை ஆவணப்படுத்த முடிந்தது. அதுபோன்று தமிழரின் தொன்மை நாகரீகங்களை அடையாளப்படுத்தும் அகழாய்வுகளை முறையாக ஆவணப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.எழுதப்பட்டவை மட்டும் வரலாறு என்றில்லாமல், எழுதப்படாத பொது வாழ்வியல் முறையை வரலாறாக கட்டமைக்கும் போது, அதுவே உண்மையான சமூக, பொருளாதார வரலாறாக இருக்கும்.வரலாறு எழுதுகிறவர்களைப் பொறுத்தே கட்டமைக்கப்படுகிறது. எந்த வரலாறுகளிலும் ஒரு மன்னர் தன்னைப் பற்றி தவறாக எழுதி வைத்ததாக தகவல் இல்லை. மன்னர்களின் வரலாறு கட்டமைக்கப்பட்டது. மக்களின் வரலாறுதான் வரலாறு. மற்றதெல்லாம் வாய்க்கால், வரப்பு தகராறு. இவை தவிர சமூக பொருளாதார, வரலாறும் உள்ளது. இது சாதாரண மக்களின் வரலாற்றை பேசும்.வியாபாரம் செய்து கிடைத்த வருமானத்தில், நகை வாங்காமல், கர்ப்பமான பசுவை வாங்கி வீட்டில் கட்டிய பெண் பற்றிய வரலாறு சங்க இலக்கியத்தில் உள்ளது. மக்களின் வரலாறை கோயில் சுவர்களில் பார்க்க முடியாது. வரலாறு முக்கியமானது, தவிர்க்க முடியாதது என்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உட்பட பலர் பேசினர்.