உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது... :மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் புகார்: மக்களுக்காக அ.தி.மு.க., - கம்யூ., கூட்டணி

வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது... :மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் புகார்: மக்களுக்காக அ.தி.மு.க., - கம்யூ., கூட்டணி

மதுரை: மதுரை மாநகராட்சியில் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு டெபாசிட், பயன்பாட்டுக் கட்டணம், ரோடு சீரமைப்பு கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க., -- - மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வாபஸ் பெற வலியுறுத்தின.இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.தீர்மானங்களை நிறைவேற்றிய போது மாநகராட்சியில் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு டெபாசிட், பயன்பாட்டு கட்டணம், ரோடு சீரமைப்பு கட்டணம் ஆகிய தீர்மானங்களுக்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தினர். இதுபோல் மா.கம்யூ., கவுன்சிலர்கள் விஜயா, குமரவேல் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மேயர், இது அரசின் கொள்கை முடிவு. கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.இதன் பின் நடந்த விவாதம்:* வாசுகி, தலைவர், மண்டலம் 1: வார்டு நிதி ரூ.25 லட்சத்தை கவுன்சிலர்களிடம் வழங்கி தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தயார் நிலையில் உள்ள 3 மின் மயானங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மின் மயானங்களிலும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும். குழாய் பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்க வேண்டும்.* கமிஷனர்: அனைத்து மின் மயானங்களிலும் கட்டணம் விவரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்யப்படும்.* சரவண புவனேஸ்வரி, தலைவர் மண்டலம் 2: மாநகராட்சிக்கு உட்பட்ட ஓ.எஸ்.ஆர்., (திறந்தவெளி ஒதுக்கீடு) இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லை. மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் பல மாதங்களாக கிடைப்பதில்லை. பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. தலைமையாசிரியர்கள் கூட்டம் நடத்தி பாதிப்புக்களை அறிந்து பராமரிக்க வேண்டும்.* கமிஷனர்: சேதமடைந்துள்ள மாநகராட்சி பள்ளிகள் குறித்து விவரம் எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.* பாண்டிச்செல்வி, தலைவர், மண்டலம் 3: கவுன்சிலர்களுக்கான வார்டு நிதி ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.* மேயர்: (கிண்டலாக) ஏன் அரை கோடியாக உயர்த்த வேண்டும் என கூறுங்களேன்.* சுவிதா, தலைவர், மண்டலம் 5: சித்திரை திருவிழா நெருங்கும் நிலையில் குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதாகி கிடக்கின்றன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. புதிய மண்டல அலுவலகம் வேண்டும்.* சோலைராஜா: மாநகராட்சியில் 156 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. மனிதப் பயன்பாடு அடிப்படையில் இதில் 80 சதவீதம் கழிவுநீர் உருவாகும். இதன்படி 124 எம்.எல்.டி., கழிவு நீர் வெளியேற வேண்டும். ஆனால் வெள்ளக்கல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 10.5 எம்.எல்.டி.,யும், சக்கிமங்கலத்திற்கு 6 எம்.எல்.டி., கழிவுநீர் தான் சென்று சேர்கிறது என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. மீதமுள்ள 107.5 எம்.எல்.டி., கழிவுநீர் நகர் பகுதிகளில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதற்கு பிரதான காரணம் பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்பாடு முடங்கி விட்டன.கமிஷனர், மேயர்: பம்பிங் ஸ்டேஷன் செயல்பாடுகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.* சோலைராஜா: அடுத்த மாதம் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். அப்போது 100 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் இருக்க வேண்டும். டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும்.* விஜயா, மா.கம்யூ.,: 91 பக்கம் தீர்மானம் நகல் உள்ளன. ஆனால் முதல்நாள் இரவு தான் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எப்படி தீர்மானங்களை முழுமையாக தெரிந்துகொள்வது.* மேயர்: அடுத்த முறை 4 நாட்களுக்கு முன்பே வழங்கப்படும்.* விஜயா: இந்தாண்டு மாநகராட்சி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருவாய் தொடர்பான விஷயங்கள் இல்லை. மதுரையிலும் வடக்கு, மத்தி வாழ்கிறது... தெற்கு தேய்கிறது (தி.மு.க., அமைச்சர், எம்.எல்.ஏ., தொகுதி என்பதால் வடக்கு, மத்திக்கு அதிக நிதியும், ம.தி.மு.க., எம்.எல்.ஏ., என்பதால் தெற்கிற்கு சரியாக ஒதுக்கவில்லை என்ற ரீதியில் குறிப்பிட்டார்)* மேயர்: இதுபோல் பொதுவாக குற்றம் சுமத்தி பிரச்னை ஏற்படுத்தக்கூடாது. அனைத்து மண்டலம், வார்டுகளுக்கு சமமாக ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

'பாஸ்' கிடைக்குமானு தெரியல

* மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர் பாஸ்கரன் உட்பட பலர், சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சிகளுக்கு கவுன்சிலருக்கு மட்டும் தான் ஒரு பாஸ் வழங்கப்படுகிறது. இம்முறை கவுன்சிலர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் வி.ஐ.பி., 'பாஸ்' வழங்க வேண்டும் என்றனர்.* அதற்கு மேயர், 'எல்லோருக்கும் பாஸ் கிடைக்குமானு தெரியல. நானே திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்குவதை வீட்டில் இருந்து 'டிவி' யிலதான் பார்க்கிறேன்' என பதில் அளித்தார்.* உறுப்பினர்கள் சிலர் முன்கூட்டியே எழுதிக்கொடுக்காத கேள்விகளை கேட்டதால் அதிகாரிகள் பதில் அளிப்பதில் சிரமம் எற்பட்டது. அப்போது 'உறுப்பினர்கள் முன்கூட்டியே எழுதிக்கொடுத்த கேள்விகளை தான் விவாதிக்க வேண்டும்' என மேயர் கண்டித்தார்.* தி.மு.க., கவுன்சிலர் நாகநாதன் பேசுகையில், தனிமனை ஒப்புதல் பெற்ற எல்.பி.எஸ்., பொறியாளர் மாநகராட்சிக்கு போலி 'டிடி' வழங்கி மோசடி செய்தது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்வேன் என்றார்.அதற்கு மேயர், மாநகராட்சி சார்ந்த விஷயங்களை இங்கு மட்டும் தான் விவாதித்து தீர்வு காண வேண்டும். லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ய விரும்பினால் தாராளமாக செய்யலாம் என்றார்.

முதல்வருக்கு அ.தி.மு.க., பாராட்டு

அவனியாபுரத்தில் நடத்திய ஜல்லிக்கட்டில் மாடு முட்டி நவீன் என்ற கபடி வீரர் இறந்தார். அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் அந்த வீரரின் மனைவிக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவரான சோலைராஜா தலைமையில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டு, கலெக்டர் சங்கீதா உத்தரவில், அவனியாபுரத்தில் சுகாதார பணியாளராக அப்பெண் நியமிக்கப்பட்டார். அதற்கான உத்தரவை மேயர், கமிஷனர் அப்பெண்ணிடம் வழங்கினர். மேலும் அரசும் ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தது. இதற்காக கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி சோலைராஜா நன்றி தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்., ஜெ., மீது திடீர் பாசம்

கூட்டத்தில் மேயர் பேசுகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் சிலைகள் முறையாக பராமரிக்கவில்லை. அவர்கள் சிலை மீதுள்ள காய்ந்த மாலைகளை பார்க்கும் போது கவலையளிக்கிறது. துாய்மை பணியாளர்கள் பராமரித்தால் மக்கள் தினம் மாலையிட்டு மரியாதை செலுத்துவர் என்றார். தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் திடீரென எம்.ஜி.ஆர்., ஜெ., மீது அக்கறை காட்டியது தி.மு.க., கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

अप्पावी
ஏப் 25, 2025 11:21

வடக்கு வாழ்கிறதுன்னு எந்த வடக்கை சொல்றாங்க? திருச்சியும் வடக்கு. சென்னையும் வடக்கு, ஆந்திராவும் வடக்கு, உ.பி.யும் வடக்கு.


புதிய வீடியோ