செல்லுார் கண்மாயில் ஆகாயத்தாமரை அகற்றம் மிதவை இயந்திரம் உதவியால் நடந்தது
மதுரை : மதுரை செல்லுார் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் கோரைப் புற்களை மிதக்கும் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை நீர்வளத் துறை நேற்று தொடங்கியது.மதுரையில் அக். 24 முதல் 26 வரை பெய்த மழையால் செல்லுார் கண்மாய் நிறைந்தது. வெள்ளமென பாய்ந்த உபரிநீர் பந்தல்குடி கால்வாயில் நிரம்பி வழிந்ததால் அருகில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. கண்மாயில் பயன்படுத்தாமல் இருந்த ஷட்டர்களை ஒட்டி பள்ளம் வெட்டி வெள்ளநீர் வைகை ஆற்றுக்குள் செல்ல தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. செல்லுார் கண்மாயில் தத்தனேரி, செல்லுார் பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் படர்ந்துள்ளது. மேலும் கோரைப்புற்களும் வளர்ந்துள்ளன.நீர்வளத்துறை சார்பில் 117 ஏக்கர் கண்மாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை மிதவையின் மீது மண் அள்ளும் இயந்திரத்தை ஏற்றிச் சென்று அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அகற்றிய தாவர கழிவுகளை டிப்பர் லாரிகளில் சேகரித்து வெள்ளக்கல் குப்பைக் கிடங்குக்கு அனுப்பினர். தொடர்ந்து 20 நாட்கள் இப்பணி நடக்க உள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர். 290 மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால் வெட்டும் பணிகள் ரூ.11 கோடி மதிப்பில் தொடங்க உள்ளது.