மூளைச்சாவு அடைந்த பெண்ணிடம் உறுப்புதானம் பெறமுடியாத சோகம்
மதுரை : மதுரை ஹார்விபட்டி ஹரிதேவி 43, மகனுடன் டூவீலரில் சென்ற போது தவறி விழுந்ததில் மூளைச்சாவு அடைந்தார். உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த நிலையில், ஹரிதேவியின் உடல் ஒத்துழைக்காததால் கருவிழிகளை மட்டுமே தானமாக பெறமுடிந்தது. முன்னாள் கவுன்சிலர் ராஜகோபாலின் மனைவி ஹரிதேவி. இரு மகன்கள் உள்ளனர். அக்., 1 இரவு மகனுடன் டூவீலரில் ஹரிதேவி சென்ற போது திருப்பரங்குன்றம் கோயில் அருகே தானாக தவறி விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அக். 3 இரவு 9:30 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ராஜகோபால் முன்வந்தார். ஆனால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: ஹரிதேவிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்துள்ளது. மூளைச்சாவு ஏற்படும் முன்பாக அவரது உடலில் ரத்தஅழுத்தம் சீராக இல்லை. ரத்த அழுத்தம் சீராக இருந்தால் தான் உடல் உறுப்புகளை எடுப்பதற்கு கால அவகாசம் கிடைக்கும். மற்ற உறுப்புகள் வேகமாக செயலிழக்க ஆரம்பித்த நிலையில் கருவிழிகளை மட்டுமே தானமாக பெறமுடிந்தது என்றனர். தானம் செய்த 27 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் 2023 முதல், மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. இதுவரை 3 பெண்கள் உட்பட 27 பேரிடமிருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், தோல், எலும்பு, கருவிழிகள் எடுக்கப்பட்டு நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.