மேலும் செய்திகள்
ஒரு ஏக்கர் தொழில் மனை ரூ.56 கோடிக்கு விற்பனை
27-Mar-2025
மதுரை: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தொட்டமான்துறை நீரேற்ற பாசன திட்டத்தை துவங்கினால், மதுரை மாவட்டத்தில் மேலுார் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காது என்பதால் திட்டத்தை கைவிட வேண்டும் என, மேலுார் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.மதுரை மேலுார் பகுதியில் முல்லைப் பெரியாறு நீரை பயன்படுத்தி 85 ஆயிரத்து 563 ஏக்கர், திருமங்கலம் பகுதியில் 19ஆயிரத்து 439 ஏக்கர் விவசாயம் நடக்கிறது.தேனி கம்பம் பகுதியில் 14 ஆயிரத்து 407 ஏக்கர், இரு போக பகுதியில் 45 ஆயிரத்து 407 ஏக்கர், சிவகங்கை சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாய், பி.டி.ஆர்., பெரியாறு கால்வாய்கள், கடைசியாக 18 ம் கால்வாய் திட்டம் வரை பெரியாறு அணை நீரைக் கொண்டு 2.08 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இத்தனை ஏக்கர் நிலத்திற்கும் ஒரு தடவை பாசனம் செய்ய 34 டி.எம்.சி., தண்ணீர் தேவை. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் 40 ஆண்டு சராசரி அளவு 22 டி.எம்.சி., தான். ஏற்கனவே பற்றாக்குறை இருப்பதால் சிங்கம்புணரி நீட்டிப்பு வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து பல ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில் தேனி மாவட்டம் தொட்டமான் துறையில் புதிய திட்டத்தை செயல்படுத்த நினைப்பது தவறு என்கிறார் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் குறிஞ்சிகுமரன்.அவர் கூறியதாவது: நீர்வளத்துறை அதிகாரிகள் விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் பூர்வீக வேளாண்மை நிலங்களை பாலைவனமாக்க நினைக்கின்றனர். கடைமடை பகுதி வரை பாசனம் கிடைக்கச் செய்வதே நீர்வளத்துறையின் வேலை. ஆனால் புதிதாக தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 7250 ஏக்கருக்கான தொட்டமான்துறை நீரேற்று பாசன திட்டத்தை செயல்படுத்துவதை ஏற்கமுடியாது. இது ஏற்கனவே பெரியாறு அணை நீரை பயன்படுத்தும் விவசாயிகளின் உரிமைகளை பாதிக்கும் செயல். இதனால் கடைமடை பகுதியான மேலுார் விவசாயம் பாதிக்கப்படும், எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றர்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் கூறுகையில், ''இதுகுறித்து கலெக்டர் சங்கீதா, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ரமேஷ் ஆகியோரிடம் ஆலோசித்து வருகிறோம்'' என்றார்.
27-Mar-2025