நல்லாவே விளையாடுறாங்க... : மதுரை ரேஸ்கோர்ஸில் திரும்பும் இடமெல்லாம் கட்டடம் : திட்டமிடல் இல்லாமல் கட்டப்படுவதால் இடநெருக்கடி
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் திரும்பும் இடமெல்லாம் தனித்தனி கட்டடங்களாக கட்டப்படுவதால் விளையாட்டு அரங்குகளின் எண்ணிக்கை குறைவதுடன் வாகனங்கள் செல்லும் பாதையின் அகலமும் குறைந்து வருகிறது.மைதானத்திற்குள் நுழைந்தவுடன் இடது பக்கம் டென்னிஸ் கோர்ட், அதையொட்டி ஜிம்னாஸ்டிக் ஹால் உள்ளது. ஜிம்னாஸ்டிக் ஹால் என்பது குட்டைச்சுவருடன் நான்கு பக்கமும் திறந்தவெளியாக மேலே ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் பயிற்சியும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மழை பெய்தால் சாரல் வீசி உள்ளே இருக்கும் மெத்தைகளும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.ஒலிம்பிக் அகாடமி என்ற பெயரில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கபடி, டேபிள்டென்னிஸ் அரங்கு, ஜிம் அரங்கு அமைக்க திட்டமிட்டு இடத்தேர்வு நடந்தது. இடத்தேர்வின் போதே மைதானத்தின் அளவை சுருக்காமல் ஏற்கனவே உள்ள தனித்தனி கட்டடங்களின் மீது கூடுதல் கட்டுமானம் அமைக்கலாம் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கேற்ப ஜிம்னாஸ்டிக் ஹால் மேல் சுவர் எழுப்பி கான்கிரீட் தளம் அமைத்து முதல் மாடி கட்டினால் அதில் ஜிம் அரங்கு கட்டியிருக்கலாம். ஆனால் ஜிம்னாஸ்டிக் ஹாலை ஒட்டியிருந்த மண்தரை வாலிபால் அரங்கை அழித்து விட்டு அந்த இடத்தில் ஜிம் கட்டுமான வேலை நடக்கிறது. அதேபோல பின்பக்கத்தில் பீச் வாலிபால் போட்டி நடத்தப்பட்டு வந்த அரங்கில் கபடி உள்ளரங்கு கட்டப்படுகிறது.அதேபோல் செயற்கை டர்ப் ஹாக்கி மைதானம், செயற்கை தடகள டிராக் இடையே பத்தடி அகல ரோடு தான் உள்ளது. மைதானத்தை சுற்றி வர வேண்டுமெனில் இந்த பாதையில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும். இடைப்பட்ட இடத்தில் புதிதாக பாராலிம்பிக் வீரர்களுக்காக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் முழுமையடையும் போது போக்குவரத்துக்கு இடைஞ்சல் என்ற பெயரில் அங்குள்ள வேப்பமரம் தான் முதலில் வெட்டுப்படும் அபாயம் உள்ளது. மேலும் அடுத்தடுத்து மரங்களை வெட்டுவதற்கும் வாய்ப்புள்ளது. அவசரத்திற்கு தீயணைப்பு வாகனம் வந்து செல்லும் அளவிற்கு ரோடு அகலமாகவும் இல்லை.இந்தாண்டு டிசம்பரில் ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடத்துவதற்காக தனியாக ஹாக்கி வளாகம் கட்டப்பட உள்ளது. அப்போது வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் இல்லை.ரேஸ்கோர்ஸ் நுழைவாயிலின் வலதுபக்கமுள்ள கட்டடத்தை அகற்றி விட்டு அங்கே மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அரங்கு கட்டியிருந்தால் அனைவரும் எளிதாக முன்பக்கமே வந்து செல்ல முடியும். அருகிலேயே வாகன பார்க்கிங் உள்ளது. இப்போது மைதானத்தின் பின்பகுதி வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. திட்டமிடல், தொலைநோக்கு பார்வையின்றி எழுப்பப்பட்டு வரும் கட்டடங்களை மறு பரிசீலனை செய்வதே ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என்கின்றனர் வீரர்கள், பயிற்சியாளர்கள்.