உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாயில் கழிவுநீரை கலக்க திட்டமிடும் திருமங்கலம் நகராட்சி

கண்மாயில் கழிவுநீரை கலக்க திட்டமிடும் திருமங்கலம் நகராட்சி

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி ஜவகர் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் என்ற பெயரில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் ஓரளவு பணிகள் முடிந்த இடங்களில் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் கட்டப்படும் கால்வாய் நடுவே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நெட்வொர்க் துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அதிக மழை பெய்தாலோ, கழிவுநீர் அதிகம் வெளியேறினாலோ அவ்வழியாக செல்ல இயலாது. குப்பை அடைத்துக் கொண்டால் தண்ணீர் ரோட்டில் தான் தேங்கி நிற்கும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு கால்வாயைக் கட்டி, அதில் வரும் தண்ணீர் அருகில் உள்ள குட்டி நாயக்கன்பட்டி கண்மாயில் சென்று கலப்பது போல் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஏற்கனவே அந்தப் பகுதி கடைகள், தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் திருமங்கலம் நகராட்சியின் கொசு உற்பத்தி மையமாகவும் அந்த கண்மாய் உள்ளது. இந்த நிலையில் ஜவகர் நகர் பகுதி கழிவுநீரும் இக்கண்மாய்க்குள் சென்றால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு, தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டும். ஜவகர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கபிலன் கூறியதாவது : தற்போது ஜவகர் நகரில் மழை நீர் வடிகால் என்ற பெயரில் கால்வாய் கட்டப்படுகிறது. ஆனால் வீடுகளில் வெளியேறும் கழிவு நீர் மட்டுமே இந்த கால்வாயில் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. ஏனெனில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற இதுவரை எந்த ஏற்பாடும் யாரும் செய்யவில்லை. எனவே வீட்டுக்கழிவு நீரை கடத்தும் வகையில்தான் அதிகாரிகள் திட்டமிடுகின்றனர். இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்து கழிவு நீர் கண்மாயில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை