வரலாற்றுச் சின்னங்களை மீட்டெடுக்கிறது சுற்றுலாத்துறை. இதுதாங்க நம்ம மதுரை
மதுரையில் கீழமாசி, தெற்கு மாசி வீதி சந்திப்பில் இரும்புத்துாணில் விளக்குகள் ஏற்றப்பட்டதால் இது விளக்குத்துாண் என பெயர்பெற்றது. மாசி வீதி சந்திப்புகளின் பெருமையாக திகழும் விளக்குத்துாண் தற்போது பராமரிப்பின்றி துாண்களை சுற்றிலும் மரக்கன்றுகள் தானாக முளைத்து வளர்கின்றன. இங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது பத்து துாண் சந்து. வரிசையாக பத்தடி இடைவெளியில் நீண்ட கற்துாண்கள் இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன. இவை ஐந்தடி சுற்றளவில் 50 அடி உயரத்துடன் உருண்டை வடிவில் கட்டப்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் அரண்மனையின் ஒருபகுதி ரங்கவிலாசம் எனப்படுகிறது. அதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்து வந்தார். அந்த ரங்க விலாசத்தின் துாண்கள் தான் இந்த பத்து துாண்கள். ரங்க விலாசத்தின் மற்றைய பகுதிகள் மறைந்து விட்டன. இப்போது எஞ்சியுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை (மகால்) சொர்க்கவிலாசம் எனப்படுகிறது. மகாலுக்கு அருகில் தான் பத்து துாண்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்கப்பட்ட சின்னமாக தொல்லியல் துறை பராமரிக்கிறது. புதுமண்டபத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டு புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதன் அருகில் பிரமாண்ட நந்தியும், கட்டி முடிக்கப்படாத வேலைப்பாடுகளுடன் கூடிய ராயகோபுரம் (சுவர்) உள்ளன. இதை மின்னொளி ஆக்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு தற்போது கிடப்பில் உள்ளது. இதுபோன்ற கட்டடக்கலை வேலைப்பாடுகளை வெளிமாநில, வெளிநாட்டு பயணிகள் அறியும் வகையில் அவற்றை புதுப்பொலிவாக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. பத்துதுாண், விளக்குத்துாண், ராயகோபுரத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு தனி அடையாளமாக காட்டப்பட உள்ளது. புதுமண்டபத்தில் அறநிலையத் துறை அனுமதி பெற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், மீனாட்சியம்மன் கோயில் வரலாற்றை சொல்லும் வகையில் 'லேசர் லைட்டிங் ஷோ' நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதுமண்டபத்தில் இருந்து மதுரை திருமலை நாயக்கர் மகால் வரை பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்படும். இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும். அழகுபடுத்தல் பணிகள் முடிந்தால் மதுரையின் பாரம்பரிய அடையாளம் வெளியுலகிற்கு தெரியவரும்.