உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேயரை முற்றுகையிட்ட வியாபாரிகள்

மேயரை முற்றுகையிட்ட வியாபாரிகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் கழிப்பறை கட்டடங்களை திறக்க வந்த மேயர் இந்திராணி பொன்வசந்த்தை தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர்.பஸ் ஸ்டாண்ட் அருகே துாய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பறை கட்டடத்தை மேயர் இந்திராணி பொன் வசந்த், கிரிவலப் பாதையில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடத்தை துணை மேயர் நாகராஜன் திறந்து வைத்தனர். மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சிவா, சிவசக்தி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரமேஷ், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.மேயரை முற்றுகையிட்டு மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ''அம்மா உணவகத்தின் கழிவு நீர் குழாய் சேதமடைந்து திறந்தவெளியில் செல்வதால் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. மார்க்கெட் பகுதியில் குடிநீர் வசதி வேண்டும். பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு டவுன் பஸ்கள் மீண்டும் வர வேண்டும். மார்க்கெட் கழிப்பறையை வியாபாரிகள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்'' என்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மேயர் உறுதி அளித்தார். திறப்பு விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் கழிப்பறைகள் பூட்டப்பட்டன.மண்டல தலைவர் சுவிதா கூறுகையில், ''கழிப்பறைகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பராமரிக்கப்பட உள்ளன. அதற்கான பணி நடந்து வருகிறது. கழிப்பறைகள் மூடப்பட்டது குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் மூலம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை