முல்லைப்பெரியாறு அணை விவகாரம் ஸ்டாலினை கண்டித்து போராட்டம் உதயகுமார் அறிவிப்பு
மதுரை: ''கேரளாவுக்கு வீணாக செல்லும் முல்லைப் பெரியாறு தண்ணீரை உடனடியாக தடுத்து 'ரூல்கர்வ்' நடைமுறையை மாற்ற தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் எச்சரித்துள்ளார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: 1979ல் அணை பலம் இழந்து விட்டதாக கேரளா புகார் கூறியதால் 152 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம், பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்தலாம் என ஜெயலலிதா 2014ல் உச்ச நீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஒட்டுமொத்த விவசாயிகள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தினர். அணையில் 152 அடி தேங்கும் தண்ணீரை முழுவதுமாக தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என 1986ல் அமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளது. 2014 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க 2வது சுரங்கப்பாதை அமைக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் 'ரூல்கர்வ்' என்ற நடைமுறையில் ஒவ்வொரு மாதத்திற்கான நீர்த்தேக்க அளவை மத்திய நீர்வள கமிஷன் நிர்ணயிக்கிறது. இந்நடைமுறையை மாற்ற தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணைக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஜூலை 31 வரை 136 அடி மட்டுமே தேக்க முடியும் என்கிறது 'ரூல்கர்வ்' நடைமுறை. அதற்கு மேல் வரும் தண்ணீரை கேரள பகுதிக்கு வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரியாறு அணைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை போல் ஒரு வார்த்தை கூட அணை குறித்தும், 152 அடி உயர்த்துவதற்கும் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதாலும், இங்கே கூட்டணியில் அக்கட்சி இருப்பதாலும் அதில் இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கிறார்களே தவிர விவசாயிகள் குறித்து கவலை இல்லை. கேரளாவுக்கு வீணாக செல்லும் தண்ணீரை உடனடியாக தடுத்து ரூல்கர்வ்' நடைமுறையை மாற்ற தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து அறவழிப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.