நம்பியோரை நட்டாற்றில் விட்டு விட்டு கருத்து கந்தசாமியானவர் தினகரன் காய்ச்சி எடுக்கிறார் உதயகுமார்
மதுரை : ''நம்பி வந்தோரை அரசியல் அனாதையாக்கிய பெருமை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் தினகரனுக்கு உண்டு. அவர் கருத்து கந்தசாமியாக முன்னாள் முதல்வர் பழனிசாமி குறித்து பேசுகிறார்,'' என, மதுரையில் அ.தி.மு.க., எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: எப்போது ஒருவர் தி.மு.க., வையும், முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி பேசுகிறாரோ, அப்போதே அவர் அ.தி.மு.க., குறித்து பேசும் தகுதியை இழந்து விடுகிறார். 2026 சட்டசபைத்தேர்தலில் தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, நிராகரிக்கப்பட்ட ஒருவர் கூறும் கருத்தை பொருட்படுத்த தேவையில்லை. தமிழகத்தில் ஆளுமை தோல்வி, இயலாமை, வகுக்கும் திட்டம் தோல்வியால் புறக்கணிக்கப்பட்டு, பொறாமையாகி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒருவர் (தினகரன்) பேசுவதை யாரும் பொருட்படுத்தவில்லை. தி.மு.க.,வின் மன்னராட்சியை அழித்து, ஜனநாயகம் மலர வேண்டும் என்ற லட்சியத்துடன் பொதுச் செயலாளர் பழனிசாமி, அ.தி.மு.க.,வை மீட்டு மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார். நான்கரை ஆண்டுகள் காலம் சிறப்பாக ஆட்சி நடத்தி குடிமராமத்து திட்டம், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லுாரிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் போன்ற திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அதை மறந்து கண்ணை மூடிக்கொண்டு ஒருவர் 'கருத்து கந்தசாமி'யாக பேசி வருகிறார். 2026 தேர்தலில் பழனிசாமி மீண்டும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை மலர செய்வார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம், அ.தி.மு.க., விசுவாசிகள் உட்பட அனைவரும் உங்கள்(தினகரன்) உண்மை முகத்தை புரிந்து கொண்டனர். எங்கள் அரசியல் பாதையை நீங்கள் தீர்மானிக்க தேவையில்லை. உங்களை நம்பியோரை எல்லாம் தி.மு.க.,வுக்கு வழி அனுப்பி வைத்தீர்கள். நம்பிய தொண்டர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றீர்கள். உங்களை நம்பி 18 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்து போட்டனர். அவர்களை அரசியல் அனாதையாக்கி விட்டீர்கள். உங்கள் தளபதியாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி போன்றவர்கள் இன்று ஸ்டாலினுக்கு தளபதியாகி விட்டனர். ஒரு தொண்டன் நாடாள முடியும் என்ற திராவிட வரலாறை பழனிசாமி உருவாக்கியுள்ளார் என்றார்.