கனிமவளக் கொள்ளையை தடுக்காவிட்டால் போராட்டம் உதயகுமார் எச்சரிக்கை
மதுரை: ''திருமங்கலத்தில் பல மலைகளைக் காணவில்லை. பலமுறை கனிம வளக்கொள்ளை குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை ஆட்சியாளர்களே பங்குதாரர்களாக உள்ளார்கள் என்ற சந்தேகம் உள்ளது. கனிமவளத்தை பாதுகாக்க மக்களை திரட்டி போராடுவோம்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார். மதுரையில் மேலும் அவர் கூறியதாவது: மதுரையில் 10 தொகுதிகளில் கடந்த நான்கரை ஆண்டு காலம் தி.மு.க., ஆட்சியில் என்ன வளர்ச்சி திட்டங்கள் என்று பார்த்தால் அவர்கள் விளம்பரம் செய்வதை தவிர எந்த திட்டமும் செய்யவில்லை. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த அக்கறையும் செய்யவில்லை. ஜெ., பழனிசாமி ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். நான்கரை ஆண்டுகளுக்குப் பின்பு உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு மனுக்கள் வாங்குகிறார்கள். அதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அந்த மனுக்கள் குப்பைக்கு செல்கின்றன. விடியல் பேருந்து பயணம் மக்கள் பாதுகாப்பற்ற பயணமாக உள்ளது. பழனிசாமி ஆட்சியில் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது கூட மருதங்குடி, வெள்ளாங்குளம், கூடக்கோவில் பகுதிகளில் மண் அள்ளப்படுகிறது. ஜெ., ஆட்சியில் கனிம வளத்திற்கு பாதுகாப்பு அரணாக இருந்தோம். இன்றைக்கு ஆட்சியாளர்களே மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு கூறினார்.