உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குவாரிகளில் மண்வளம் சுரண்டல் கலெக்டருக்கு உதயகுமார் கடிதம்

குவாரிகளில் மண்வளம் சுரண்டல் கலெக்டருக்கு உதயகுமார் கடிதம்

மதுரை : ''மதுரை மாவட்டத்தில் கல்குவாரி, மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பெர்மிட் மூலம் சட்ட விரோதமாக மண்வளம் சுரண்டல் நடந்து வருகிறது'' என கலெக்டர் பிரவீன்குமாருக்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது: திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலுார் சட்டசபை தொகுதிகளில் அமைந்துள்ள கல்குவாரிகள், மணல் குவாரிகளில் தொடர்ந்து அரசு அனுமதித்த அளவை விட அதிகமான அளவு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதியில் மணல் குவாரிகளில் போலி ரசீது, போலி பெர்மிட் மூலம் மண்வளம் சுரண்டப்படுகிறது. சட்டவிரோத கல்குவாரிகள், மணல்குவாரிகளை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு நடத்தி கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்ட உயிர் பலி போல் மதுரையில் நடக்கக்கூடாது. திருமங்கலம் ஒன்றியம் புதுப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை உள்ளிட்ட கிராமங்களில் போலி ரசீது வைத்துக்கொண்டு கனிமவளக் கொள்ளை நடந்து வருவதை தடுத்து நிறுத்த மக்கள் என்னிடத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து சட்டசபையிலும் பேசியுள்ளேன். ஆகவே சிறப்பு கவனம் செலுத்தி சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி