அனுமதியின்றி கொடிக்கம்பம் கட்சிகள் தவிர்க்க வலியுறுத்தல்
மதுரை : ''அரசு ஊழியர்கள் பலிகடா ஆவதால், அனுமதி பெறாமல் கொடிக்கம்பங்கள் நடுவதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும்'' என வருவாய்த் துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அரசியல் கட்சிகளின் கொடிக்கம்ப பிரச்னையால் அரசு ஊழியர்கள், கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் போக்கு ஏற்படுகிறது. மாநில அளவில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஏதாவது ஒரு கட்சி தங்கள் பலத்தை நிரூபிக்க கட்சிக் கொடியை நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதும், அதனால் பிரச்னை உருவாவதும் சமீப கால நிகழ்ச்சியாக உள்ளன. அது இன்று உயர்நீதி மன்றம் அளவுக்கு வழக்காக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.அரசின் சட்டவிதிகளை கடைபிடிக்கும் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை புறம்போக்கு இடங்களில் கொடி நடுவதற்கு அனுமதியில்லை. பட்டா நிலங்களில் நடுவதற்கும் அரசின் அனுமதி பெற்றே நட வேண்டும். அதற்கும் சென்னை வரை போய் அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும். ஆனால் எல்லா கட்சிகளுமே எளிதாக ரோடு சந்திப்புகளிலோ, பிரதான பகுதிகளிலோ நட முயற்சிக்கின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையே ஏற்படுகிறது. தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அரசு அனுமதியற்ற இடங்களில் நிறுவப்படுகின்றன. அரசியல் அழுத்தங்களின் காரணமாக இது தொடர்வதும், இதனால் வருவாய்த்துறை ஊழியர்கள், அலுவலர்கள் பலிகடா ஆவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு தீர்வு காண, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசு அனுமதி இல்லாத இடங்களில் உள்ள தங்கள் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றிடவும், புதிதாக கட்சிக் கொடி நிறுவுவதை தவிர்த்திடவும் வேண்டும். அனைத்து கட்சியினரும் இதனை தங்கள் கட்சித் தொண்டர்களிடமும் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.