ரயில்வே கேட் அகற்றுவதை நிறுத்த வலியுறுத்தல்
திருமங்கலம் : கள்ளிக்குடி சத்திரம் முதல் சோளம்பட்டி வழியாக ஓடைப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், பேய்குளம், மருதங்குடி, வேப்பங்குளம், சுந்தரம் குண்டு கிராமங்களுக்கு செல்ல கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக அருகில் ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் ரயில்வே அண்டர் பாஸ்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக சென்றால் 2.5 கி.மீ., முதல் 5 கி.மீ., வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் சோளம்பட்டி வழியாக செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கிராசிங்கை நிரந்தரமாக மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நீண்ட துாரம் அலைக்கழிக்கப்படுவர். எனவே ரயில்வே கேட்டை அகற்றுவதை நிறுத்த வேண்டும் என மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலாளர் மணி மாறன் கலெக்டர் மற்றும் ரயில்வே அதிகாரி களுக்கு மனு அனுப்பியுள்ளார்.