கனமழையால் நிரம்பும் உசிலம்பட்டி கண்மாய்கள்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் நேற்று பெய்த மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.உசிலம்பட்டி வட்டாரத்தில் சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் 2:00 மணிக்கு துவங்கிய மழை 2 மணிநேரம் கொட்டித் தீர்த்தது. பரவலாக பெய்த மழையால் மாதரை, கருக்கட்டான்பட்டி, நல்லுத்தேவன்பட்டி கண்மாய்களில் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.மேற்கு மலைத்தொடர்களில் இருந்து சிறு சிறு ஓடைகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது. மதுரை ரோடு கொங்கபட்டி பகுதியில் உசிலம்பட்டி நகர் பகுதியில் இருந்து செல்லும் மழைநீரும், சாக்கடை கழிவு நீரும் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. வார்டு 3 பகுதியில் நீராளி ஊருணியிலும் நீர்நிரம்பி வெளியேற வழியில்லாமல் தெருக்களில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இருந்த போதும் 10 ஆண்டுக்கும் மேலாக கண்மாய்களுக்கு மழைநீர் வரத்து கிடைக்காத நிலையில் இந்த பருவத்தில் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.