உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூடுதல் மகசூல் தரும் வம்பன் 11 ரக உளுந்து

கூடுதல் மகசூல் தரும் வம்பன் 11 ரக உளுந்து

உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் புதிய ரகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் அதிக மகசூல் பெறலாம்.தமிழ்நாடு வேளாண் பல்கலை 2020ல் வம்பன் 11 என்ற உளுந்து ரகத்தை வெளியிட்டது. வம்பன் 11 ரகம் தமிழகத்தில் எல்லா பருவங்களிலும் பயிரிட ஏற்றது. இதன் வயது 70 முதல் 75 நாட்கள். இது மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 8 கிலோ விதைகள் தேவை. விதைப்பதற்கு முன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளுடன் 80 மில்லி வேளாண் பல்கலையின் விதை அமிர்தத்தை கலக்க வேண்டும். விதை அமிர்த கரைசல் பூசிய விதைகளை 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால் விதைகள் விரைவாக முளைக்கும், வேர் வளர்ச்சி வேகமாக இருப்பதால் செடிகளும் வேகமாக வளரும். வேர் முடிச்சுகள் அதிகமாக காணப்படும்.

வறட்சி தாங்கும்

மேலும் வறட்சியை தாங்கி வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். நிலத்தின் ஈரப்பதத்தை பொறுத்து 7 முதல்10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். உளுந்து மகசூலை அதிகரிக்க ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வேளாண் பல்கலையின் 'பயறு அதிசயம்' கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவையான அளவு ஓட்டும் பசையுடன் சேர்த்து பூக்கும் பருவத்தில் தெளித்தால் பூக்கள் உதிர்வது குறையும். பயறு விளைச்சல் 20 சதவீதம் வரை கூடும். தொழில்நுட்பங்களை முறையாக பின்பற்றினால் உளுந்து வம்பன் 11 ரகம் இறவையில் ஒரு ஏக்கருக்கு 370 கிலோவும், மானாவாரியில் 340 கிலோ கிலோவும் மகசூலாக கிடைக்கும். விதைகள் தேவைப்படும் விவசாயிகள் விருதுநகர் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கட்டணம் செலுத்தி பெறலாம்.- செல்விரமேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேணுதேவன், உதவிபேராசிரியர் (விதை அறிவியல்), வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை. அலைபேசி: 81481 93645.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !