உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோரிப்பாளையத்தை கடக்க பதறும் வாகனங்கள்; கலெக்டர் அலுவலக ரோட்டில் கதறுகின்றன

கோரிப்பாளையத்தை கடக்க பதறும் வாகனங்கள்; கலெக்டர் அலுவலக ரோட்டில் கதறுகின்றன

மதுரை, ஆக. 12 -'கோரிப்பாளையம் பக்கம் போகாதீங்க...' என கதறினாலும், வேறு வழியின்றி தவிர்க்க முடியாமல் சென்று தினமும் போக்குவரத்து சுழலில் சிக்கித் திணறுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். ஒன்றரை ஆண்டுக்கு முன் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பால பணிகள் துவக்கப்பட்டன. மருத்துவமனைகள், கல்லுாரிகள், கலெக்டர் அலுவலகம் என 'பிசி'யான பகுதி என்பதால் காலை முதல் இரவு வரை இந்த சந்திப்பில் வாகனங்கள் கதறி அழாத குறையாக கடந்து செல்கின்றன. கோரிப்பாளையம் ரவுண்டானாவை சுற்றி 4 பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணிகள் நடக்கிறது. புதுாரில் இருந்து வரும் வாகனங்கள் தல்லாகுளத்திலேயே நெருக்கடியை சந்தித்து 'நத்தை'யாக நகர்ந்து சந்திப்பை கடக்க அரை மணிநேரம் ஆகிறது. தமுக்கம் முதல் மீனாட்சி கல்லுாரி முன்பு பாலம் ஏறுவது வரை பள்ளம், மேடு 'சோதனை மேல் சோதனை'யாக உள்ளது. நெரிசலாக செல்லும் வாகனங்கள் முன், பின், முட்டிக்கொண்டு 'பஞ்சாயத்து' உருவாகிறது. அதை தீர்க்க போலீசார் படும்பாடு பெரும்பாடாகிறது. கலெக்டர் அலுவலக நெரிசல் இதற்கிடையே அண்ணா பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் சிலை, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கின்றனர். அதிலும் குறைதீர்நாள் கூட்டம் நடக்கும் திங்கள் கிழமைகளில் அங்கும் நெரிசலோ நெரிசல். இந்த ரோட்டில் மருத்துவமனைகள் உள்ளன. இதனால் அவசர நோயாளிகளுடன் செல்லும் ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் போராடி செல்கின்றன. காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மனமிருந்தும் வழிதர முடியாத அளவு நெரிசல் பிதுங்குகிறது. என்னதான் தீர்வு பால பணி முடியும் வரை அனைத்து ரோடுகளையும் சீரமைக்கவோ, புதிதாக அமைக்கவோ வேண்டும். கோரிப்பாளையம் பகுதியை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க புதிய வழித்தடங்களில் வாகனங்களை மாற்ற போக்குவரத்து போலீஸ் யோசிக்க வேண்டும். பாலப்பணி முடியும் வரை கலெக்டர் அலுவலக பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். மீனாட்சி மகளிர் கல்லுாரி முன் வாகனங்கள் தேக்கமின்றி செல்ல கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும். கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் ஆட்டோக்களை நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !