உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாக்டர்களுக்கு பதவி உயர்வு இல்லாத கால்நடைத்துறை

டாக்டர்களுக்கு பதவி உயர்வு இல்லாத கால்நடைத்துறை

மதுரை : எம்.பி.பி.எஸ்., போலவே பி.வி.எஸ்.சி., முடித்து கால்நடை டாக்டர்களாக பணியில் சேர்ந்தாலும் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் பதவி உயர்வே வழங்கப்படுவதில்லை.தமிழகத்தில் 2019 ல் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு, வேலுார் மாவட்டத்தைப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி, திருநெல்வேலியைப் பிரித்து தென்காசி என புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 2020 ல் நாகப்பட்டினத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆனபோதும் புதிய மாவட்டங்களுக்கு என இத்துறைக்கு இணை இயக்குநர், துணை இயக்குநர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த பழைய மாவட்டங்களின் இணை, துணை இயக்குநர்கள் புதிய மாவட்டங்களுக்கும் சேர்த்து வேலை செய்கின்றனர்.கலெக்டர்கள் கூட்டம் நடத்தும் போது ஏதாவது ஒரு மாவட்டம் சார்பாக மட்டுமே கலந்து கொள்ள முடிவதால் கால்நடை சார்ந்த தடுப்பூசி, பிற பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்கின்றனர் கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர்.அவர்கள் கூறியதாவது: கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை உதவி டாக்டர்களாக பணியில் சேர்கிறோம். 25 ஆண்டுகளை கடந்த நிலையில் தான் கால்நடை உதவி இயக்குநர் பணியிடம் முதல்நிலை பதவி உயர்வாக வழங்கப்படுகிறது. அதன் பின் ஓய்வு பெறும் வரை அடுத்த பதவி உயர்வு கிடைக்குமா என காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த முறையை தவிர்க்கும் வகையில் டி.ஏ.சி.பி., எனப்படும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை பதவி உயர்வு எனும் முறை கொண்டு வரப்பட்டது. இதன் படி வேலையில் சேர்ந்த 8 வது ஆண்டு, 16, 20, 24 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முறை கொண்டு வந்த 2 மாதங்களிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது வரை பதவி உயர்வுக்காக டாக்டர்கள் காத்திருக்கிறோம். தமிழகத்தில் 3000 டாக்டர்கள் கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரிகிறோம். 20 ஆண்டுகளை கடந்தபின் முதல் நிலை பதவி உயர்வு (உதவி இயக்குநர்) பெற்ற 200க்கும் மேற்பட்டோர் எட்டாண்டுகளை கடந்த நிலையில் அடுத்த பதவி உயர்வுக்காக காத்திருக்கிறோம். மற்ற துறைகளைப் போல பதவி உயர்வு வழங்காததால் வேலையில் அதிருப்தியும் மனச்சோர்வும் ஏற்படுகிறது. ஏற்கனவே 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் 1800 கால்நடை உதவி டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். புதிதாக சேர்ந்தவர்களும் ஏற்கனவே எட்டாண்டுகளை கடந்தவர்களும் ஒரே பதவியில் உள்ளனர். எனவே காலமுறை பதவி ((சி.ஏ.சி.பி.) உயர்வை தமிழக அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !