செம்பூரில் அமையவுள்ள மத்திய சிறைக்கு எதிர்ப்பு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
மதுரை: மதுரையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.கருப்பாயூரணி பகுதியை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிடுமாறு பா.ஜ., முன்னாள் தலைவர் சுசீந்திரன் மனு அளித்தார். அதில், எங்கள் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பலரும் பயன்பெறுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட பல ஊராட்சிகளில் இன்னும் பாதாளச் சாக்கடை, குடிநீர் வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். சுரங்கபாதை வேண்டும்
திருமங்கலம் அருகே ஆலம்பட்டி மக்கள் அளித்த மனு: 2000 குடும்பங்கள் இருக்கின்றன. தற்போது மதுரை -- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி என அனைத்திற்கும் புதிதாக அமையவுள்ள நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து கொடுத்தால் மக்கள் பயன்பெறுவோம். சம்பள உயர்வு தேவை
விடுதலை சிறுத்தைகள் கட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மாநில துணைச் செயலாளர் முத்து அளித்த மனு: மதுரைமாநகராட்சியில் டி.பி.சி., டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் 532 பேர் உள்ளனர். சம்பளமாக ரூ. 328 கொடுக்கின்றனர். இருப்பினும் 3ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை. சம்பள உயர்வு உயர்த்தி தர வேண்டும்.சிலைமான் பாண்டியராஜன் அளித்த மனு: கார்சேரி, இளமனுாரில் நெல் விளைச்சல் ஒருமாதகாலத்தில் அறுவடை செய்ய தயாராக உள்ளது. எங்கள் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும். சிறையை மாற்றுங்க...
மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டடி மனையில் தமிழக அரசு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய அனுமதிக்குமாறுமாற்றுதிறனாளிகள் சார்பாக வனிதா மனு அளித்தார்.மேலுார் செம்பூர் கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் சிறை அமையவுள்ளது. நாங்கள் விவசாயம் செய்கிறோம். அமையவுள்ள சிறைச்சாலை பகுதியில்தான் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வோம். பல்வேறு உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன. சிறைச்சாலையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பல உயிரினங்களும் அழியும்.எனவே மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.