மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று போராட்டம்
அவனியாபுரம்,: மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிகள் தற்போது நடந்து வருகின்றன. பெரிய விமானங்கள் வந்திறங்க ஏதுவாக, 2 கி.மீ., அளவுக்கு 'ரன்வே' நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஆறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டது. சின்னஉடைப்பு கிராமத்திலும் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில், மயானம் கையகப்படுத்தப்பட்டன. அதற்கு மாற்றாக அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு மாநகராட்சி பகுதிக்குள், 3 சென்ட் வீட்டுமனையும், வீடும் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கிராமத்தில் உள்ள வீடுகள், நிலங்களை கையகப்படுத்த, தாசில்தார்கள் விஜயலட்சுமி, பிரபாகரன் இயந்திரங்களுடன் வந்தனர்.தற்கொலைகிராமத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், தாசில்தார்கள் பேச்சு நடத்தினர். இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; மக்களின் கோரிக்கையை உயரதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நேற்று மீண்டும் நிலங்களை கையகப்படுத்த டி.ஆர்.ஓ., கார்த்திகாயினி, தாசில்தார்கள் விஜயலட்சுமி, பாஸ்கரன் வந்தனர். மண் அள்ளும் இயந்திரங்கள், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள், போலீசின் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டன. 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இதையறிந்த கிராமத்தினர் 16 பேர், அப்பகுதி மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் ஏறி, பெட்ரோல் கேன்களுடன் நின்று தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்தனர்.வருவாய், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தி, ஒரு வார காலம் அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர். அச்சுறுத்தல்அதன் பின்னும் போராட்டத்தில் ஈடுபட்டோர், வீடுகளுக்கு செல்லாமல் ஊரின் நுழைவாயிலில் பந்தல் அமைத்து குழந்தைகளுடன் தங்கினர். அனைவருக்கும் ஒரே இடத்தில் உணவு சமைத்தனர். அவர்கள் கூறுகையில், ''இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். அதுவரை போராட்டம் தொடரும்,'' என்றனர்.அவர்களை திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா சந்தித்து பேசினார்.அவர் கூறுகையில், ''அரசு எடுக்கும் நிலத்திற்கு பதிலாக மாநகராட்சி எல்லைக்குள் குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். இது சம்பந்தமாகவும், கால அவகாசம் வழங்க கோரியும் கலெக்டர், தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்களை அதிகாரிகள் அச்சுறுத்தக் கூடாது. கனிவுடன் அணுக வேண்டும்,'' என்றார்.