442 பயனாளிகளுக்கு ரூ.2.76 கோடி நலத்திட்டம்
மதுரை : மதுரையில் அம்பேத்கர்பிறந்தநாளையொட்டி தமுக்கம் மைதானத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி,வெங்கடேசன், பூமிநாதன், டி.ஆர்.ஓ., சக்திவேல், மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை மேயர் நாகராஜன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் அமைச்சர் மூர்த்தி 442 பயனாளிகளுக்கு ரூ.2.76 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்திய அளவில் சமத்துவத்தை பாதுகாப்பதிலும், எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக செயல்படுகிறது.துாய்மைப் பணியாளர்களின் சேவையை கவுரவிக்கும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்டோர் சுயதொழில் துவங்க கடனுதவி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை ஆதிதிராவிடர் சமூகத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.முன்னதாக சமபந்தி விருந்து நடந்தது. அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.