அரசு மருத்துவக்கல்லுாரிகளில் டாக்டர்களுக்கான காலிப்பணியிடங்களை மறைக்கும் மர்மம் என்ன
மதுரை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் டாக்டர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பாத நிலையில் தேசிய மருத்துவ கவுன்சிலில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மறைத்தோ, குறைத்தோ காட்டப்படுகிறது.தமிழகத்தில் 33 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச் 15, அதற்கு மேல் கவுன்சிலிங் நடத்தி காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் நான்காண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் அரசாணை 4 (டி) வெளியிட்டு ஒரே நாளில் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது 2023 - 24, 2024 - 25க்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.கடந்த மாதம் டீன் பணியிடத்திற்கான கவுன்சிலிங் நடந்தபோதே அடுத்து மருத்துவ கண்காணிப்பாளர், கல்லுாரி துணைமுதல்வர், பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளதும்கூட கடந்தாண்டுக்கான 2023- 24 காலிப்பணியிட அறிவிப்பு தான். இந்தாண்டுக்கான கவுன்சிலிங் இன்னும் முறைப்படி நடக்கவில்லை.அ.தி.மு.க., ஆட்சியில் செய்ததைப் போன்று ஒரே நாளில் கவுன்சிலிங் நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும். அதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் திட்டமிட்டே தாமதப்படுத்துவதாக பதவி உயர்வை எதிர்நோக்கியுள்ள அரசு டாக்டர்கள் வேதனைப்படுகின்றனர்.அவர்கள் கூறியதாவது: டீன் பேனல் அறிவிப்பு முடிந்தவுடன் மருத்துவ கண்காணிப்பாளர், துணை முதல்வர், பேராசிரியர் பணியிடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தியிருந்தால் இணைப்பேராசிரியர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றிருப்பர். அவர்களின் காலிப்பணியிடங்களை உதவி பேராசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதன் மூலம் நிரப்பியிருக்கலாம். காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில் முதுநிலை மருத்துவம் முடித்த மாணவர்களை நிரப்பியிருக்கலாம். அனைத்து பணியிடங்களும் ஏற்கனவே அரசாணை மூலம் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் என்பதால் கூடுதல் தொகை செலவாகாது.மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் மட்டும் பேராசிரியர், இணைப்பேராசிரியர், உதவி பேராசிரியர்களுக்கான 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள 33 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் குறைந்தது 600 முதல் 700 பணியிடங்கள் காலியாக உள்ளன. என்.எம்.சி.,யிலும் சிக்கல்
தேசிய மருத்துவ கவுன்சில் (என்.எம்.சி.,) பதிவேட்டில் கல்லுாரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மறைக்கப்படுகின்றன. பேராசிரியர் பணியிடம் காலியாக இருந்தால் அந்த இடத்தில் இணைப் பேராசிரியரும், இணைப் பேராசிரியர் இடத்தில் உதவி பேராசிரியரும் காட்டப்படுகின்றனர். காலிப்பணியிடம் அதிகமாக இருந்தால் அந்தந்த கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் என்பதாலேயே இந்த விஷயம் மூடி மறைக்கப்படுகிறது. அங்கீகாரத்தை தக்க வைக்க செய்த இந்த முயற்சியால் கோவை, தஞ்சாவூரில் வழக்கும் பதிவாகியுள்ளது. காலிப்பணியிடங்களை முறையாக ஆண்டுதோறும் கவுன்சிலிங் நடத்தி நிரப்பியிருந்தால் என்.எம்.சி., பதிவேட்டில் தவறான எண்ணிக்கையை காட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.சுகாதாரத்துறை அமைச்சரும், செயலரும் உண்மை கண்டறியும் குழு அமைத்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றனர்.