அ.தி.மு.க.,வை மீட்க தினகரன் என்ன ராஜராஜ சோழனா உதயகுமார் கேட்கிறார்
மதுரை: ''அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் தினகரன் தான் ராஜராஜசோழன். நீங்கள் தான் அ.தி.மு.க.,வை மீட்டுத் தர வேண்டும் என தொண்டர்கள் யாரும் அவரிடம் கேட்கவில்லை,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார். அவர் கூறியதாவது: தினகரன் அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும் என புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் எடுப்பது பழைய படம், புதிய பிரின்ட். அவரின் படம் மக்களிடம் ஓடாது. 'தினகரன் தான் ராஜராஜசோழன். நீங்கள் தான் அ.தி.மு.க.,வை மீட்டுத்தர வேண்டும்' என தொண்டர்கள் யாரும் அவரிடம் கேட்கவில்லை. ஒரு தேர்தலில் கூட அ.ம.மு.க., வெற்றி பெறவில்லை. தேர்தலில் தினகரன் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். அவரது கொள்கை கோட்பாடு லட்சியம் எங்களுக்கு தேவை இல்லை. அ.தி.மு.க., வேண்டாம் என அ.ம.மு.க.,வை துவங்கிய தினகரன் இன்று தாய் வீட்டுக்கு வர வேண்டும் என பேசுகிறார். தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டி மக்களாட்சியை கொண்டு வர அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஜனநாயகத்தை வளர செய்ய பாடுபட்டு வருகிறார். பழனிசாமி உதவி செய்யும்போது அவரது பிள்ளை உதவி செய்து வருவதில் ஆச்சரியம் இல்லை. இது சட்டவிரோதம் கிடையாது. இதை சிலர் வேறு பார்வையில் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. பழனிசாமியை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதை திசை திருப்பும் விதம் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். செங்கோட்டையன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என எனக்கு தெரியாது. யார் இருந்தால் எனக்கென்ன. இவ்வாறு அவர் கூறினார்.