மக்களுக்கு விஜய் செய்த சேவை என்ன செல்லுார் ராஜூ கேள்வி
வாடிப்பட்டி : ''த.வெ.க., தலைவர் விஜய் மக்களுக்கு செய்த சேவை என்ன,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: அமலாக்கத்துறை சோதனையை மறைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அ.தி.மு.க., மீது குறை சொல்லுகிறார். மடியில் கனம் இல்லை என்றால் அமலாக்கத்துறை சோதனைக்கு ஏன் பயப்பட வேண்டும். அமைச்சர் வீட்டிலேயே இதுபோன்ற சோதனை நடந்திருப்பதால், இந்த ஆட்சியை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஊழலின் போது காங்., ஆட்சியில் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் தி.மு.க., கூட்டணியில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் அஞ்சவில்லை. வி.சி., தலைவர் திருமாவளவன் தற்போது திக்கு தெரியாத காட்டிற்குள் சிக்கியது போல தி.மு.க.,வில் சிக்கியுள்ளார். அவர் தி.மு.க., கூட்டணியில் இருக்கும்போது அ.தி.மு.க., குறித்து பேசுகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை புகழ்கிறார். அவரது பேச்சு முன்னுக்குபின் முரணாகவே உள்ளது. கமல் மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கினார். எம்.பி., பதவிக்காக இப்போது காணாமல் போய் விட்டார். சினிமாவில் விஜய் நுாறு பேரை அடிக்கலாம். துப்பாக்கியால் சுட்டு சாகசம் செய்யலாம். நடைமுறையில் இதெல்லாம் நடக்குமா. சினிமா ரசிகர் கூட்டம் என்பது வேறு. மக்களுக்கு அவர் செய்த சேவை என்ன. அவர் வரலாறு என்ன என்றார்.