| ADDED : நவ 28, 2025 07:49 AM
திருப்பரங்குன்றம்: 'திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்' என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கிடம், மதுரை கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவசுந்தரம் மனு அளித்துள்ளார். மனுவில் கூறி இருப்பதாவது: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட் பாரத்தில் தென்பகுதியில் இருந்து வரும் ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த பிளாட்பாரத்தின் நீளம் குறைவாக இருப்பதால் துாத்துக்குடி - மைசூர் விரைவு ரயிலின் 5 பெட்டிகள் பிளாட்பாரத்தை தாண்டி நிற்கின்றன. இரண்டு நிமிடங்களே ரயில் இங்கு நிற்கும். அந்த நேரத்திற்குள் வயதானோர், பெண்கள் ரயிலில் ஏறி இறங்க சிரமப்படுகின்றனர். பலர் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடக்கிறது. இதுகுறித்து மனு கொடுத்தும், ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஸ்டேஷன் கட்டடம் அருகில் மட்டும் நிழற்குடை உள்ளது. சற்றுத் தள்ளி நிற்கும் பயணிகள் மழை, வெயிலில் நனைந்து, காய்கின்றனர். இவ்வழியில் செல்லும் விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. பொதிகை, குருவாயூர் - சென்னை விரைவு ரயில்களையாவது இரு வழித்தடத்திலும் 2 நிமிடங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.