அழகர்கோவிலுக்கு நிர்வாக செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா: உறுதி செய்ய உத்தரவு
மதுரை, : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு 1932 ல் நிர்வாக செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு கூறுவதை உறுதி செய்து தெரிவிக்க அரசு தரப்பிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலுார் வெள்ளரிப்பட்டி பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.40 கோடியில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கடைகள், பக்தர்கள் தங்கும் விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணியை மேற்கொள்ள தமிழக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் கோயில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பணியை கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். செப்.1 ல் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கோயில் வளாக கிழக்கு பகுதி பெரியாழ்வார் திருவரசு மற்றும் தெற்கில் வசந்த மண்டபம் பகுதியில் கோட்டைச் சுவரை திரும்ப கட்டுதல், கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்க புது விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது. இதுபோல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். ஆக.28 ல் இரு நீதிபதிகள் அமர்வு,'கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டது. நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், வாதிராஜ் அனிருத், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், கோயில் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகினர். வாதிராஜ் அனிருத், 'இக்கோயிலுக்கு 1932 ல் நிர்வாக செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது,' எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தார். இதை அரசு மற்றும் கோயில் தரப்பில் உறுதி செய்து தெரிவிப்பதற்காக அக்.22 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.