எஸ்.ஜி.எப்.ஐ., விளையாட்டுக்கு இருமுறை மாணவர்கள் தேர்வு ஏன் அரசின் நிதி, மாணவர்களின் உழைப்பு வீண்
மதுரை: பள்ளிக்கல்வித்துறை நடத்தும் மாநிலப் போட்டி களில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்திற்கு (எஸ்.ஜி.எப்.ஐ.,) அனுப்பாமல் மீண்டும் தேர்வு செய்வதால் இரட்டைச் செலவு, ஆசிரியர்களின் நேரம், திறமையான மாணவர்களின் உழைப்பு வீணாகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் பாரதியார் தினம், குடியரசு தின விழா தடகள, பழைய, புதிய விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படு கின்றன. இதுதவிர தேசியப் பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் (எஸ்.ஜி.எப்.ஐ.,) கீழ் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிக்கு தமிழக அணியின் சார்பில் மாணவர்களை அனுப்ப வேண்டும். பள்ளிக்கல்வித்துறை நடத்தும் மாநில தடகளப் போட்டி, புதிய விளையாட்டில் உள்ள நீச்சல் போட்டியில் முதலிடம், இரண்டாமிடம் பெறுபவர்கள் தமிழக அணியின் சார்பில் நேரடியாக எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் ஜூடோ, பென்சிங் உட்பட 21 புதிய விளையாட்டுகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களை நேரடியாக தேசியப் போட்டிக்கு அனுப்பாமல் விளையாட்டிலும் பாரபட்சம் காட்டுகின்றனர் என்கின்றனர் தமிழக அரசுப்பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள். அவர்கள் கூறியதாவது: ஜூடோ, பென்சிங் உட்பட 21 வகையான புதிய விளையாட்டுகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக தேசியப் போட்டிக்கு அனுமதிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்த போது அதை பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக் கொண்டது. மாநில அளவில் புதிய விளையாட்டுகளில் முதலி டம், 2ம் இடம் பெறு பவர்களை தமிழக அணியின் சார்பில் நேரடியாக தேசியப் போட்டிகளுக்கு அனுப்ப பரிந்துரை செய்தது. ஆனால் இந்தாண்டு மீண்டும் வழக்கம் போல தமிழக அணிக்கான தனித்தேர்வு நடத்தப்படுகிறது. மீண்டும் மண்டல, மாநில அளவில் தேர்வு என்பதே மாணவர்கள் தேர்வில் முறைகேட்டுக்கு வழிவகுப்பதை போலிருக்கிறது. திறமையான மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றிருக்கும் போது தனியாக மீண்டும் ஏன் தமிழக அணிக் கான தேர்வை நடத்த வேண்டும். எல்லாம் வீண் எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிக்காக தமிழக அணி தேர்வு செய்யப்படும் போது இரண்டாவது முறையாக அரசின் நிதி விரயமாகிறது, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களின் நேரம் வீணாகிறது, திறமையான மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தகுதியான மாணவர்கள் எஸ்.ஜி.எப்.ஐ., போட்டியில் பங்கேற்றால் படிவம் 4க் கான சான்றிதழ் கிடைக்கும். இதன் மூலம் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும். ஜூடோ உட்பட புதிய விளையாட்டுகளுக்கான தமிழக அணித் தேர்வு இனிமேல் தான் நடக்க உள்ளது. இந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் மாநிலப் போட்டிக்கான வெற்றியை தேசியப் போட்டிக்கான தகுதியாக ஏற்க வேண்டும் என்றனர்.