உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு சிறப்பு பொறியாளர்கள் குழு: சென்னை போல் மதுரைக்கு வருமா

மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு சிறப்பு பொறியாளர்கள் குழு: சென்னை போல் மதுரைக்கு வருமா

மதுரை: மதுரை மாநகராட்சியில் குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு உதவி செயற்பொறியாளர் தலைமையில் சிறப்பு பொறியாளர் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் வார்டுகள் வாரியாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டாலும் குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு பிரத்யேக பொறியாளர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையை அடுத்து 100 வார்டுகளை கொண்ட பெரிய மாநகராட்சியாக மதுரை உள்ளது. இங்கு மக்களுக்கு வழக்கமாக வைகை, காவிரி, முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் தினசரி குடிநீர் சப்ளையை கண்காணிக்க வேண்டியுள்ளது. இது தவிர்த்து புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள், பராமரிப்பு, ரோடுகள் பணி, பராமரிப்பு, வாட்ஸ்ஆப் புகார் மீதான நடவடிக்கைகள், முகாம்கள் என பல்வேறு பணிகளை தற்போது வார்டு பொறியாளர்கள் கவனிக்கின்றனர். சிறப்பு குழுக்கள் அதேநேரம் புதிய குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடுகள் பணிகளையும் அவர்கள் கூடுதலாக கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் பணிகளில் வேகம், தரம் கேள்விக்குறியாகிறது. டிசம்பரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள முல்லைப் பெரியாறு இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை நுாறு சதவீதம் முடிக்கவும் மாநகராட்சிக்கு சவாலாக உள்ள நிலையில் இதுபோன்ற சிறப்பு பொறியாளர் குழுக்களை ஏற்படுத்த மாநகராட்சி ஆலோசிக்கலாம். மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: திட்டப் பணிகளுக்கு பிரத்யேக பொறியாளர் குழு அமைக்கும் நடைமுறை மதுரைக்கு மிக தேவை. தற்போது 54 வார்டுகளில் புதிய குடிநீர் திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளில் புதிய பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடக்கின்றன. இவற்றை ரெகுலர் வார்டு பணிகளை கவனிக்கும் பொறியாளர்கள் தான் மேற்கொள்கின்றனர். இதனால் குடிநீர் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்பு தொடர்பான புகார்கள் அதிகம் வருகின்றன. இதை சரிசெய்யும் வகையில் குடிநீர், பாதாளச் சாக்கடை, ரோடு பணிகளுக்கான சிறப்பு பொறியாளர் குழுவை ஏற்படுத்தலாம். தற்போது மாநகராட்சியில் 69 ரெகுலர் பொறியாளர், கூடுதல் பொறுப்பு வகிக்கும் பொறியாளர்கள் உள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் அரசாணைப்படி (852) மதுரை மாநகராட்சிக்கு மொத்தம் 40 பொறியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பொறியாளர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு, இதுபோன்ற பிரத்யேக பொறியாளர் குழுக்களை ஏற்படுத்த மாநகராட்சி கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கலாம். இதன்மூலம் குடிநீர், பாதாளச் சாக்கடை தொடர்பான பணிகளில் வேகம் அதிகரிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
நவ 12, 2025 07:20

தூய்மையற்ற நகராட்சி - மதுரை திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் கழிவுநீர் வாய்க்கால் Sewer Canal கட்டுமானப் பணிகளில் பல்வேறு தரக்குறைவு காணப்படுவதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். காணப்பட்ட குறைகள்: 1. தரமற்ற சிமெண்ட் கலவை பயன்படுத்தப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 2. மழைக்காலத்தில் மணல் நிரப்புதல் செய்யாமல் பணிகள் நடைபெறுவதால் • மண் தள்ளாடுதல் • குழிகள் உருவாகுதல் • நடைபாதைகள் சரிவதும், மக்கள் வழுக்கி விழும் அபாயமும் ஆகியவை அதிகரித்துள்ளன. 3. பணிகள் முடிந்த பின்னும் நடைபாதைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. 4. வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்பட்டுள்ளன — இதனால் • கொசு பெருக்கம் • துர்நாற்றம் • சுகாதாரப் பிரச்சினை ஆகிய அபாயங்கள் உண்டு. பொது மக்களின் முக்கிய கவலை: இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ₹90 லட்சம் என அறிந்துள்ளோம். உள்ளூர் மக்கள் கருத்தின்படி, ₹25-30 லட்சம் வரை ஊழல் பணம் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோல் செய்யப்பட்டால் மீதமுள்ள தொகையில் தரமான கட்டுமானம் செய்ய இயலாது என்பதே குடியிருப்பாளர்களின் கவலை. பொது பாதுகாப்பு அபாயம்: இந்தப் பணிகள் தரக்குறைவாக நீடித்தால் • வாய்க்கால்கள் உடைபடும் • நீர் தேக்கம் • மண் சரிவு • மக்கள் காயம் / உயிரிழப்பு என பாரிய அபாயங்கள் உருவாகும். இதற்கான முழுப் பொறுப்பும் நகராட்சியின்மேல் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் கோரிக்கைகள்: 1. ஒப்பந்ததாரரின் பணிகளுக்கு தரச் சோதனை செய்து அறிக்கை வெளியிடவும். 2. மணல் நிரப்புதல் மற்றும் நடைபாதை சீரமைப்பு உடனடியாக செய்யப்பட வேண்டும். 3. திறந்த வாய்க்கால்களை தகுந்த தகடுகளால் மூடி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும். 4. சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும். 5. அனைத்து பணிகளும் பொது தொழில்நுட்ப தரநிலைகளுக்கு ஏற்ப செய்யப்பட வேண்டும். முடிவில் மக்களின் உயிர், பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு தயவுசெய்து இந்தப் புகாரில் உடனடியாக நீதிசார்ந்த மற்றும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


முக்கிய வீடியோ