மயானத்திற்கு அடிப்படை வசதிகள் அமைக்கப்படுமா
சோழவந்தான்: காடுபட்டி ஊராட்சி வடகாடுபட்டியில் ஆதிதிராவிடர் மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இங்கு விக்கிரமங்கலம், மேலக்கால் ரோட்டில் ஆதிதிராவிடர் காலனி மயானம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில் வெறும் மயான கூரை மட்டுமே அமைந்துள்ளது. தண்ணீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் இறுதிச்சடங்குகளின் போது மிகுந்த சிரமம் அடைகின்றனர். தற்போது பராமரிப்பின்றி சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சியளிப்பதுடன் விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறிவிட்டது. இதனால் அச்சத்துடனேயே மயானத்திற்கு சென்று வரும் நிலை உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.