ஓய்வெடுக்க வசதியில்லாத தும்பைப்பட்டி லாரி பார்க்கிங் டிரைவர்கள் நலனை நகாய் கவனிக்குமா
மேலுார்: தும்பைபட்டி லாரி பார்க்கிங் பகுதியில் ஹைமாஸ் விளக்கு செயல்படாததால் வாகன ஓட்டிகளின் உயிர், உடமைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தும்பைபட்டியில் லாரி பார்க்கிங் 15 ஆண்டுகளாக செயல்படுகிறது. வெகு தொலைவில் இருந்து வாகனங்களை ஓட்டிவரும் டிரைவர்கள் இங்கு தங்கி ஓய்வெடுப்பர். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்கு 2 மாதங்களுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லை. சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் கூறியதாவது: வெகுதொலைவில் இருந்து வரும் டிரைவர்கள் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றனர். வெளிச்சம் இல்லாமல் இருளாக உள்ளதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் டிரைவர்களை தாக்குவது நடக்கிறது. இதில் காயமடைவதுடன், பணம், லாரியில் கொண்டுவரும் பொருட்களை திருடுகின்றனர். அவர்களுக்குப் பயந்து டிரைவர்கள் ஓய்வெடுக்காமல் செல்கின்றனர். இதனால் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இங்குள்ள குளியலறை, கழிப்பறை காட்சிப் பொருட்களாக மாறிவிட்டன. மேலும் பார்க்கிங்கில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இங்கு இருளில் பதுங்கி இருந்து நெடுஞ்சாலையில் செல்வோரிடம் வழிப்பறி செய்யும் அவலமும் நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஹைமாஸ் விளக்கு உட்பட அடிப்படை தேவையை உடனே நிறைவேற்ற வேண்டும்.