உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயர்நிலைக் குழுக்கள் மறுசீரமைக்கப்படுமா: நுாலகர்கள் எதிர்பார்ப்பு

உயர்நிலைக் குழுக்கள் மறுசீரமைக்கப்படுமா: நுாலகர்கள் எதிர்பார்ப்பு

மதுரை: தமிழக பொது நுாலகத்துறையில் புத்தகங்கள் கொள்முதல், நிர்வாக முடிவுகளை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக் குழு, உயர்நிலைக் குழுவில் நுாலகத்துறை சார்ந்த அலுவலர்கள் இடம்பெறவில்லை. இக்குழுக்களை மறுசீரமைத்து, நுாலகப் பணியில் அனுபவம் கொண்ட, துறை சார்ந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் 4755 நுாலகங்கள் இயங்குகின்றன. இவை அனைத்துக்கும் புத்தகங்களை கொள்முதல் செய்வதில் குளறுபடி நடக்காமல் இருக்க, 2024ல் 'வெளிப்படைத் தன்மை நுால்கள் கொள்முதல் கொள்கை' வெளியிடப்பட்டது. அதன்படி, புனைவு, பொது நுால்களை பரிந்துரை செய்ய, எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் அடங்கிய 137 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைக்கும் ஆயிரக்கணக்கான நுால்களில் இருந்து, இறுதிப்பட்டியலை 13 பேர் கொண்ட குழு இறுதி செய்கிறது. வல்லுநர் குழு, தேர்வுக்குழு, விலை பேச்சுவார்த்தை நடத்தும் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளையும் ஆராய்ந்து 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு ஒப்புதல் அளிக்கிறது. புத்தகக் கொள்முதல் பேச்சுவார்த்தைக் குழுவில் பொது நுாலக இயக்குநர் தலைவராகவும், துணை இயக்குநர், நிதித்துறை துணைச் செயலர், முதன்மை கணக்கு அலுவலர், அண்ணா நுாற்றாண்டு நுாலக முதன்மை நுாலகர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இக்குழு புத்தகங்களின்விலை நிர்ணயம், பதிப்பாளர்களுடனான பேச்சுவார்த்தை உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிறது. நுாலகத்துறையின் கொள்கை முடிவுகள், நிர்வாக நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் உயர்நிலைக் குழுவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைவராகவும், பொது நுாலக இயக்குநர் செயலராகவும் உள்ளனர். நிதித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர்கள், தமிழ்நாடு பாடநுால், கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உறுப்பினர்களாக உள்ளனர். நுாலகங்களின் தேவை, வாசகர்களின் விருப்பம், நுால்களின் தரம் உள்ளிட்டவற்றில் நுாலகர்களுக்கு மட்டுமே நேரடி அனுபவம் உள்ளது. இத்தனை குழுக்கள், உறுப்பினர்கள் என இருந்தும் மற்றவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. எனவே நுாலகத் துறையில் தற்போதைய குழுக்களை மறுசீரமைத்து, அனுபவம் வாய்ந்த நுாலக அலுவலர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தால் மட்டுமே பொது நுாலகங்களின் வளர்ச்சிக்கும், வாசகர்களின் நலனுக்கும் பயனளிக்கும் என நுாலகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி