நலிந்து வரும் கிடுகு பின்னும் தொழிலாளர்கள்
சோழவந்தான்: சோழவந்தான் வட்டாரத்தில் தென்னங்கீற்றுகளால் கிடுகு பின்னும் தொழில் நலிந்து வருவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடக்கிறது. இம்மரத்தின் பாகங்களில் இருந்து ஏராளமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உதாரணமாக தென்னை மட்டையில் இருந்து 'மஞ்சி கேக்' தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 'மஞ்சி கேக்' தனது எடையைக் காட்டிலும் பல மடங்கு நீரை உறிஞ்சி தேக்கி வைக்கும் திறன் கொண்டது. இதேபோன்று தென்னங்கீற்றுகளில் இருந்து கிடுகுகள் பின்னப்படுகின்றன. இவை குடிசை, பந்தல் அமைப்பதற்கு பயன்படுகின்றன. குடிசை வீடுகள் குறைந்து வருவதாலும், 'ஷாமியானா' பந்தல் வரவாலும் கிடுகு பின்னும் தொழில் பாதித்து தொழிலாளர்கள் நலிவடைந்து வருகின்றனர். கச்சிராயிருப்பு பால்சாமி: 50 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழில் செய்து வருகிறேன். 50 கிடுகுகள் கொண்ட ஒரு கட்டு ரூ.150 க்கு விற்கிறது. வியாபாரிகளிடம் கொடுத்தால் ரூ.100 தான் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு கட்டு கிடுகு மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. தோப்புகளில் காய்ந்து விழும் தென்னங்கீற்றுகளை விலைக்கு வாங்கி ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, சரியான அளவுகளில் அறுத்து கிடுகு பின்னி காய வைக்க வேண்டும். முன்பு ஏராளமான மாட்டுக்கொட்டகை, பந்தல்கள், குடிசை வீடுகள் இருந்தன. தற்போது தகரம், ஆஸ்பெஸ்டாஸ் வரவால் கிடுகுகளின் தேவை குறைந்து வருகிறது. இதனால் எங்களுக்கான வேலையும் குறைந்து வாழ்வாதாரம் பாதித்து விட்டது. கிடுகு பின்னுவதை தவிர வேறு தொழில் தெரியாததால் கஷ்ட ஜீவனம் நடத்துகிறோம். அரசு எங்களுக்கு வாழ்வாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.