உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னனுக்கு பூஜை

மீனாட்சி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னனுக்கு பூஜை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பாண்டியர்களை தேடி பயணம் வரலாற்று ஆய்வுக் குழு சார்பில், பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சங்க காலம் முதலே தமிழகத்தை ஆண்ட தொன்மையான வம்சத்தினர் பாண்டியர்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், 'சோழர்களை வீழ்த்தி மதுரையை மீட்ட மன்னர்' என்ற பெருமை பெற்றவர். இவரது ஆட்சி காலத்தில் (1216 - 1244) பாண்டிய நாடு அரசியல், பொருளாதாரம், கலாசார துறைகளில் சிறந்து விளங்கியது. அதனை நினைவு கூரும் வகையில், 700 ஆண்டுகள் கழித்து பாண்டியர் அரசின் அடையாளங்களான செங்கோல், அரசு சின்னங்கள், சுந்தரபாண்டியன் ஆட்சி கால நாணயங்களை வைத்து, வேதம் ஓதப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆய்வாளர் மணிகண்டன் கூறுகையில், ''இந்நிகழ்வு, பாண்டிய வரலாற்றின் மகத்துவத்தையும், தமிழர் மரபின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வரலாற்று நாள். மதுரை மக்களின் சுதந்திர தினமாக கருதலாம்'' என்றார். அனைத்து மறவர் நல கூட்டமைப்பு பொதுச் செயலாளர் விஜயகுமார், மாநில பொருளாளர் குமார், இளைஞரணி செயலாளர் மணிகண்டன், விஜயநகர உஜ்ஜீவனா டிரஸ்ட் மாநில செயலாளர் செந்தில்குமார், சிவனடியார் நாகராஜன், ஆய்வுக் குழுவின் பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ