உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யாத்ரி நிவாஸ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... எவ்வளவு நேரமானாலும் இலவசமாக தங்கலாம்

யாத்ரி நிவாஸ் தங்களை அன்புடன் வரவேற்கிறது... எவ்வளவு நேரமானாலும் இலவசமாக தங்கலாம்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதலாம் பிளாட்பாரத்தில் பயணிகள் வசதிக்காக உயர்வகுப்பு, 2ம் வகுப்பு பயணிகள் தங்குமிடங்கள், ஐ.ஆர்.சி.டி.சி., லாஞ்ச், குளிர்சாதன வசதி கொண்ட கட்டண காத்திருப்போர் அறை, பெண்களுக்கான பிரத்யேக அறை போன்றவை செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பார்சல் ஆபீஸ் அருகே 'யாத்ரி நிவாஸ்' எனும் நவீன பயணிகள் காத்திருப்போர் அறை செயல்படுகிறது.தரைதளம், முதல்தளங்களில் தலா 150 என 300 பேர் வரை தங்கும் வகையில் விசாலமான ஹால்கள், இருக்கை வசதி, டி.வி., அலைபேசி சார்ஜிங் வசதி,24 மணி நேர கண்காணிப்பு கேமரா, குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறைகள், முதியவர்கள் அறை என பல வசதிகள் உள்ளன. பயணிகள் இங்கு எவ்வளவு நேரம் என்றாலும் இலவசமாக தங்கலாம். பொருட்களை பாதுகாக்க, கழிவறை உபயோகிக்க மட்டும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.பொருட்களை வைக்க 30 லாக்கர்கள்,திறந்தவெளி கம்பார்ட்மென்டுகள் கொண்ட தனி அறைகள் உள்ளன. பொருள் ஒன்றுக்கு, முதல் 24 மணி நேரத்திற்கு ரூ.15, அடுத்த ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பத்து இந்திய வகை, 8 வெஸ்டர்ன் வகை கழிவறைகள், 4 சிறுநீர் கழிப்பிடங்கள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள், 16 'ஷவர்' வசதியுடன் கூடிய குளியலறைகள், 4 உடை மாற்றும் அறைகள் உள்ளன. கழிப்பறைக்கு ரூ. 5, குளிக்க ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சபரிமலை, கந்த சஷ்டி உள்ளிட்ட சீசன் நாட்களில் 180ம், மற்ற நாட்களில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் தினசரி தங்கிச் செல்கின்றனர். முதல் பிளாட்பாரத்தின் ஒரு முனையில் உள்ளதால்பலருக்கு இதுபோன்ற வசதிகள் கொண்ட காத்திருப்பு அறை செயல்படுவது தெரிவதில்லை. வடமாநில பயணிகளே அதிகம் பயன்படுத்துகின்றனர்.அவர்கள் கூறியதாவது: இதுபோன்ற தங்குமிடம் வெளிமாநில, வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஓட்டல்களில் தங்கினால் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இங்கு இலவசமாக தங்குவதுடன் பொருட்களை மட்டும் கட்டணம் செலுத்தி வைத்துவிட்டு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, போடிஉள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று 2, 3 நாட்கள் கழித்து பொருட்களை எடுத்துச் செல்கிறோம்.இதுபோன்ற தங்குமிடங்களைமற்ற ஸ்டேஷன்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ