உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் 72 வயது மாணவர்

பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் 72 வயது மாணவர்

மயிலாடுதுறை:கல்வி கற்க வயது தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதான ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர், சீர்காழி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். கடலுார் மாவட்டம், வடலுாரைச் சேர்ந்தவர் செல்வமணி, 72; நெய்வேலி என்.எல்.சி.,யில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எம்.காம்., -- எம்.பி.ஏ., -- ஐ.டி.ஐ., படித்தவர். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். செல்வமணி பணி ஓய்வு பெற்று, 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், படிப்பின் மீதான ஆர்வம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்துார் சீனிவாசா சுப்பராயா அரசினர் தொழில்நுட்ப கல்லுாரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், வயதான தன் மனைவிக்கு தேவையான வீட்டு வேலைகளை செய்து விட்டு, மற்ற மாணவர்களை போல சுறுசுறுப்பாக தோளில் புத்தக பையை சுமந்து குறித்த நேரத்திற்கு கல்லுாரிக்கு வந்து விடுகிறார். இவருடன் பழகும் மற்ற மாணவர்கள், தாத்தா என வாஞ்சையுடன் அவரை அழைக்கின்றனர். சக மாணவர்களுடன் வயது வித்தியாசம் பாராமல் சகஜமாக பழகும் செல்வமணி, தனக்கு தெரிந்தவற்றை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதுடன், தெரியாதவற்றை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 72 வயதிலும் இளைஞரை போல் கல்லுாரியில் வலம் வரும் இவரை, சக மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மற்ற மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழும் செல்வமணியை, பேராசிரியர்கள் பாராட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி