உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / நான்கு வழிச்சாலையில் தேவைக்கேற்ப அணுகு சாலை:கலெக்டர் அறுவுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் தேவைக்கேற்ப அணுகு சாலை:கலெக்டர் அறுவுறுத்தல்

மயிலாடுதுறை;விழுப்புரம்-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தேவைக்கேற்ப அணுகு சாலை அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார்.விழுப்புரம்-நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளின் ஒருகட்டமாக, மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை 45ஏ பணி திட்டத்தின் கீழ் ரூ.1905 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் 55.5 கி.மீ. தொலைவுக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, சீர்காழி தாலுக்கா பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை சாலை அமைக்கும் பணியால் சில கிராமங்களுக்குச் செல்லக்கூடிய ஏற்கனவே இருக்கக் கூடிய சாலைகள் அடைபடுவதாகவும், இதனால் பல கி.மீ தொலவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட அனந்தமங்கலம், திருக்கடையூர் ஊராட்சி வெள்ளக்குளம், நாராயணன் பிள்ளை சாவடி, சீர்காழி தாலுகாவிற்கு செம்பதனிருப்பு, காரைமேடு ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அணுகுசாலை மற்றும் வேகத்தடைகள் உள்ளிட்டவை அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக கேட்டறிந்தார். மேலும், நெடுஞ்சாலை பணிகளில் சாலை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு, சாலை அமைப்பு பணிகளை மேற்கொண்டு, விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் சக்திவேல், சீர்காழி ஆர்டிஓ. சுரேஷ், தனி தாசில்தார் (நெடுஞ்சாலை திட்டங்கள்) ஹரிஹரன், தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ