விநாயகர் ஊர்வலத்தில் ஜாதி பாட்டு நிறுத்திய போலீஸ்காரருக்கு அடி, உதை
மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீசை தாக்கிய இருவர் கைது செய்யப் பட்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர், விநாயகர் சிலையை நேற்று முன்தினம் ஊர்வலமாக தரங்கம்பாடி கடற்கரைக்கு எடுத்து வந்தனர். அப்போது, சமுதாய பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிபரப்பினர். பிரச்னை ஏற்படும் என்பதால், அப்பாடல் ஒலிபரப்பை உளவு பிரிவு போலீஸ்காரர் கார்த்திக் நிறுத்தியுள்ளார். அதே சமயத்தில், தில்லையாடியில் இருந்து விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்த மற்றொரு சமூகத்தினர், திரைப்படம் ஒன்றில் வரும் தங்கள் சமூகம் குறித்த பாடலை ஒலிபரப்பினர். இதுகுறித்து, காட்டுச்சேரி இளைஞர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸ்காரர் கார்த்திக் பாடலை நிறுத்த அறிவுறுத்தினார். ஆனால், மீண்டும் அதே பாடலை ஒலிபரப்பியதால் புளுடூத் மூலம் பாடலை ஒலிக்க பயன்படுத்திய மொபைல் போனை கைப்பற்றி, பாடலை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தில்லையாடி இளைஞர்கள் சிலர், கார்த்திகை சரமாரியாக தாக்கி, தங்கள் மொபைல்போனை எடுத்துக்கொண்டு தப்பினர். காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொறையார் போலீசார், தில்லையாடி கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 26, முருகானந்தம், 24, ஆகிய ரை கைது செய்தனர்.