உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / திருமணம் செய்த சூரியனார் கோவில் ஆதீனம் மடத்தில் இருந்து அப்புறப்படுத்த தீவிரம்

திருமணம் செய்த சூரியனார் கோவில் ஆதீனம் மடத்தில் இருந்து அப்புறப்படுத்த தீவிரம்

மயிலாடுதுறை:சூரியனார் கோவில் ஆதீனம், மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான பதிவுச் சான்று, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளால் திருவாவடுதுறை ஆதீனமும், சிவாக்ர யோகிகளால் சூரியனார் கோவில் ஆதீனமும் 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டவை.

விதிகளில் இடமில்லை

இவர்கள் இருவரும் சுத்த அத்வீக சைவம் என்ற கொள்கையில் ஒன்றுபட்டுள்ளனர். பிரம்மச்சாரிகளும், திருமணம் ஆகி பின்னாளில் மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி துறவறம் பெற்றவர்களுமே, சூரியனார் கோவில் ஆதினத்தின் குருமகா சன்னிதானங்களாக இருந்துள்ளனர். இந்த ஆதீனத்தின் மரபுப்படி கணவன், மனைவி பந்தம் உடையவர்கள் சன்னிதானமாக இருக்க முடியாது. ஆதீன விதிகளிலும் இடமில்லை. மேலும் இந்த திருமடத்தில் பெண்கள் நிரந்தரமாக தங்கக்கூடாது என்பது, முக்கியமான விதி. இத்தகைய சிறப்பும் கட்டுப்பாடும் மிக்க சூரியனார் கோவில் ஆதீனமாக, துறவறம் பூண்ட சிவாச்சாரியார்களே குருமகா சன்னிதானமாக இருந்துள்ளனர். இதனால், இது சிவாச்சாரியார்கள் மடம் என்றும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இந்த ஆதீன திருமடத்தை, தனித்து நிர்வகிக்க முடியாத நிலையில் திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்துள்ளனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான்களாக இருந்தவர்கள், சூரியனார் கோவில் ஆதீனகர்த்தர்களாக நியமிக்கப்பட்டனர்.சூரியனார் கோவில் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் சங்கரலிங்க தேசிக சுவாமிகள் பரிபூரணம் அடைந்ததை தொடர்ந்து, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், 28வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வருகிறார். இந்நிலையில், 54 வயதான மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், கடந்த மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரு அஞ்சனாபுரம் ராமநகரம் சன்னமனஹள்ளி கும்பார் தெருவைச் சேர்ந்த சிவராமையா மகள் ஹேமஸ்ரீ, 47, என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகளின் பதிவு திருமணச் சான்று, சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சூரியனார் கோவில் ஆதீனத்திடம், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமான அறிக்கை கேட்டு பெற்று உள்ளனர்.

கடும் முயற்சி

திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கீழ் இயங்கும் சூரியனார்கோவில் குருமகா சன்னிதானமாக இருக்கும் மகாலிங்க தேசிய பண்டார சுவாமிகள், விதிகளை மீறி திருமணம் செய்து கொண்டது, திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்துக்கு கவுரவ குறைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஒப்புதலோடு, மகாலிங்க தேசிய பண்டார சுவாமிகளை, குருமகா சன்னிதானப் பொறுப்பில் இருந்து அகற்றி விட்டு, அவருக்கு பதிலாக புதியவர் ஒருவரை நியமிக்க, திருவாவடுதுறை ஆதீன மடத்தைச் சேர்ந்தோர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதை சட்ட ரீதியில் சந்திக்க, மகாலிங்க தேசிய பண்டார சுவாமிகளும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

எதையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்!

மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் கூறியதாவது:திருமணம் செய்தது உண்மைதான். சிவாச்சாரியார் மடத்தைச் சேர்ந்ததுதான் சூரியனார் கோவில். எங்களது மடத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் பலரும் ஆதீனகர்த்தர்களாக இருந்து, ஏற்கனவே ஆன்மிக சேவையும், பொதுச்சேவையும், கோவில் நிர்வாக சேவையும் செய்துள்ளனர். அந்த வகையில், விதிகளை மீறி, புதிதாக எதையும் நான் செய்யவில்லை. என்ன நடந்துள்ளதோ அதை மறைக்கவும் விரும்பவில்லை. நாலு பேருக்கு தெரிந்து, வெளிப்படையாகத்தான், பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எதிராக இருக்கும் சிலர், இதை வைத்து எனக்கு சட்ட ரீதியில் சிக்கல் எதுவும் ஏற்படுத்தி, என்னை கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றலாமா என முயற்சிக்கின்றனர். அதனாலேயே, கூடாத குற்றத்தை செய்தது போல, செய்தி பரப்புகின்றனர். எதுவும் எடுபடப் போவதில்லை. எதையும், சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். அதற்கான தகுதியும்; தெம்பும் என்னிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ