உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / உடைந்த மூங்கில் பாலம் வழியாக ஆற்றை கடக்கும் அவலம்: சீர்காழி அருகே திக்.. திக்..

உடைந்த மூங்கில் பாலம் வழியாக ஆற்றை கடக்கும் அவலம்: சீர்காழி அருகே திக்.. திக்..

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உடைந்த மூங்கில் பாலம் வழியாக, ஆபத்தான நிலையில், பள்ளி மாணவ மாணவியர், பொதுமக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா மாதாம்பட்டிணம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராம மக்களின் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் தென்னாம்பட்டினம் கிராமத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்கு பெருந்தோட்டம் ஏரியின் உபரி நீர் செல்லும் முல்லை ஆற்றை கடக்க வேண்டும். இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி நிர்வாகம் ஆற்றின் குறுக்கே மூங்கிலால் ஆன பாலம் அமைத்து கொடுத்துள்ளது. பாலம் இல்லை என்றால் 4 கி.மீ., சுற்றி சென்னாம்பட்டினத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், தற்போது ஊராட்சி தலைவர் இல்லாத நிலையில் தற்போது மாதாம்பட்டினம் முல்லை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூங்கில் பாலம் சேதமடைந்து நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல், உடைந்த மூங்கில் பாலத்தின் வழியே ஆபத்தான நிலையில் பயணிக்கின்றனர். இவ்வாறு பாலத்தின் வழியே பயணித்த சில மாணவிகள், பெண்கள் ஆற்றில் விழுந்து பாதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. நாடு சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் ஆகியும் இப்பகுதிக்கு பாலம் மற்றும் சாலை வசதிகள் சரிவர இல்லை என கூறப்படும் நிலையில், மூங்கிலால் ஆன பாலத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ஆபத்தான நிலையில், ஆற்றை கடந்து வருகின்றனர். எனவே, ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும் என்றும், நிரந்தரமாக அரசு கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !