ஆமை வேகத்தில் நான்குவழி சாலை பணி பருவ மழைக்கு முன் முடிக்க எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்:நாகையில், நான்கு வழி சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், வாகன ஒட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாகை- -- விழுப்புரம் இடையே, 6,431 கோடி ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 179.5 கி.மீ.,யில் நான்கு வழிச்சாலை அமைத்து வருகிறது. விழுப்புரத்தில் இருந்து சீர்காழி அருகே சட்டநாதபுரம் வரையில், 128.8 கி.மீ.,க்கு பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. சட்டநாதபுரத்தில் இருந்து நாகை புத்துார் வரையிலான, 56 கி.மீ., துார பணி நடந்து வருகிறது. இதில், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் உட்பட, 24 மேம்பாலங்கள், 27 சிறிய பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. 'வெல்ஸ்பன்' என்ற கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த, 2022ல் முடிவடைய வேண்டிய பணிகள், ஜவ்வாக இழுத்துக் கொண்டே செல்கிறது. ஆங்காங்கே இடைவெளி விட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், மேம்பால பணிகள், 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. சில நாட்களில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பணிகள் மந்தமாக நடப்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, நிறுவன அலுவலர்கள் கூறுகையில், 'சாலை பணிகளுக்கு மண் கிடைப்பதில் சிரமம் உள்ளது. 'தொடர்ச்சியாக மண் கிடைப்பதில்லை. நெய்வேலியில் இருந்து மண் கொண்டு வருவதால், கால தாமதம் ஏற்படுகிறது. தடங்கலின்றி மண் கிடைத்தால், பணிகள் விரைந்து முடிக்கப்படும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்கள் கூறுகையில், 'வரும், 2026 ஜனவரியில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்' என்றனர். அக்டோபரில் பருவமழை துவங்கி விடும். அதற்கு முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.