தூக்கத்தை தொலைக்கும் மக்கள் உறக்கத்தில் மின்வாரியம்
நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற மின் விநியோகம் மற்றும் தொடர் மின்வெட்டு காரணமாக துாக்கத்தை தொலைத்த மக்கள், மின்துறை மீது அதிருப்தியில் உள்ளது. நாகை மாவட்டத்தில் சில தினங்களாக வெயில் சதம் அடித்து வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் முதியவர்கள், கர்ப்பிணிகள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மின் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆனால் கோடைக்காலம் துவங்கியதில் இருந்து வீடுகளுக்கு குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. கிராமங்களில் இரவில் பல மணி நேரம் மின் தடை தொடர்கிறது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.உள்ளூர் மின்வாரிய அதிகாரிகள் முதல் தலைமையக வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் உயர் அதிகாரிகள் வரை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க., அளித்தது. நான்காண்டுகள் கடந்த நிலையிலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என கடும் அதிருப்தி அரசு ஊழியர்களிடையே உருவாகியுள்ளது. அரசு மீதான அதிருப்தியை மின்வாரியம் பொதுமக்கள் மீது காட்ட துவங்கியதன் அறிகுறியே பொதுமக்கள் அளித்த புகார்கள் மீதான அலட்சியம். என்றனர்.