நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் முதல்வர் விழாவில் பங்கேற்க, மகளிர் குழுக்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக கூறி, மிரட்டல் விடுக்கும் வகையில் மகளிர் திட்ட அதிகாரி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.நாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். விழாவில் கூட்டத்தை காட்ட, தி.மு.க.,வினர் மட்டுமின்றி, அனைத்து துறைகளில் இருந்தும் பயனாளிகளை அழைத்து வர மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அந்த வகையில், மகளிர் திட்டம் சார்பில், 4,000 பெண்கள் பங்கேற்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக, மகளிர் திட்ட அதிகாரி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த ஆடியோவில் பேசியிருப்பதாவது:
தமிழக முதல்வர் நாகைக்கு வருவதால், 2023 ஏப்., 1ல் இருந்து இப்போது வரை கடன் வாங்கிய அனைத்து குழுவில் இருந்தும், 10 பேர் வீதம் கலந்து கொள்ள வேண்டும். ஒரு ஊராட்சிக்கு ஒரு பஸ் வரும். அதன் மூலம் 50 பயனாளிகள் கலந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணியர், 2 வயதுக்குட்பட்ட குழந்தை வைத்திருப்போர், முதியோர் வர தேவையில்லை. மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.மகளிர் திட்டத்தில் இருந்து 4,000 பேர் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. மகளிர் திட்டத்தில் பலன் அடைந்துள்ளீர்கள். எவ்வித காரணமும் கூடாது. அதே போல், 1.50 லட்சம் ரூபாய் காசோலை வாங்கிய குழுக்களும் கலந்து கொள்ள வேண்டும்.அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து விட வேண்டும். காலை, 7:௦௦ மணிக்கு பஸ் வந்து விடும். அப்போதே டிபன் கொடுத்து, 8:00 மணிக்கு கூட்ட அரங்கில் உள்ளே செல்லும் போது, சினாக்ஸ், ஜூஸ், தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட் அடங்கிய பை கொடுக்கப்படும். மதியம், 12:30 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன், மதியம் ஒரு மணிக்கு உணவு, ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் கொடுக்கப்படும். இது கலெக்டர் உத்தரவு.யாரும் வரவில்லை என்று கூறக்கூடாது. இல்லையென்றால் மகளிர் திட்டத்தில் இருந்து எவ்வித சப்போர்ட்டும் வராது. எந்த பலனும் கிடைக்காது. நாங்கள் கலெக்டரிடம் கடிதம் வைத்து விடுவோம். எவ்வித கால தாமத காரணமும் கூறாமல், காலையிலேயே வீட்டு வேலைகளை முடித்து விட்டு, 7:00 மணிக்கு பஸ்சில் ஏறிவிட வேண்டும். கண்டிப்பாக வர வேண்டும் வேறு வழியில்லை. இவ்வாறு, ஆடியோவில் உள்ளது.மகளிர் திட்ட அதிகாரி பேசிய ஆடியோவை, அ.தி.மு.க.,வினர் பலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், 'கலெக்டர் கட்சியின் கொள்கை பரப்பு செயலராக செயல்படுகிறார். எந்த நிதியில் இருந்து உணவு வழங்கல், வாகன ஏற்பாடு என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.