காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த தைப்பூச தேர் திருவிழா
நாமக்கல் : காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.மோகனுாரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோவிலில், தைப்பூச தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு, அன்னம், பூதம், ஆட்டுக்கிடா, யானை, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 9ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு, சுவாமி திருத்தேர் ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து, தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., ராமலிங்கம், டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார், அட்மா தலைவர் நவலடி, கவுன்சிலர் செல்லவேல், அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, உறுப்பினர்கள் செல்வசீராளன், டாக்டர் மல்லிகா, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சாமிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.மாலை, 5:00 மணிக்கு, மோகனுார் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருத்தேர் வடம்பிடித்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை அபிஷேகம், மாலை, சத்தாபரணம், நாளை, விடையாற்றி, மஞ்சள் நீர் பல்லக்கு, 14ல் மயில் வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.* திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில், கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் இருந்து வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, கைலாசநாதர் ஆலயம் முன் எழுந்தருளினார். இங்கு விநாயகர், சோமாஸ்கந்தர் சுகுந்தகுந்தலாம்பிகை, சண்டிகேஸ்வரர், சூலத்தேவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு ஆராதனை, பூஜை நடந்தது. பின், வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, சோமாஸ்கந்தர் சுகுந்த குந்தலாம்பிகை ஆகியோர், பரிவார மூர்த்திகளுடன் தேரில் எழுந்தருளினர். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.மதியம், சோமாஸ்கந்தர் சுகுந்தகுந்தலாம்பிகை திருத்தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, ஏராளமான பக்தர்கள், 'முருகனுக்கு அரோகரா; கந்தனுக்கு அரோகரா' என, பக்தி முழக்கமிட்டனர்.