ப.வேலுார் அரசு மருத்துவமனை முன் தனியார் ஆம்புலன்ஸ் நிற்க தடை
ப.வேலுார் அரசு மருத்துவமனை முன்தனியார் ஆம்புலன்ஸ் நிற்க தடைப.வேலுார், அக். 20--ப.வேலுார் அரசு மருத்துவமனை முன் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்க தடை விதித்து, அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் அப்புறப்படுத்தினார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் நகரின் மையத்தில் தாலுகா தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு பாலப்படடி, நன்செய் இடையாறு, குப்புச்சிப்பாளையம்,பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம்,வெங்கரை, ஜேடர்பாளையம், அணிச்சம்பாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.தாலுகா தலைமை மருத்துவமனையாக இது செயல்படுவதால், தினமும், 500 க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாகவும், 80 பேர் வரை உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல்,- மதுரை பிரதான சாலையில் ப.வேலுார் அமைந்துள்ளதால், சாலை விபத்தில் காயமடைவோருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இம்மருத்துவமனை நுழைவுவாயில் முன் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், 108 அவசரகால ஆம்புலன்ஸ் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நோயாளிகள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மருத்துவமனை டாக்டர்களிம் வலியுறுத்தினர்.பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், அரசு மருத்துவமனை முன் இருந்த தனியார் ஆம்புலன்ஸ்களை, மருத்துவமனை முன் நிற்க தடை விதித்து அப்புறப்படுத்தினார்.மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனை சுற்றி நிற்க கூடாது; மீறினால் அபராத விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை, அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.