உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அழைப்பிதழில் மாஜிக்கு முக்கியத்துவம் இல்லைநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., காரசாரம்

அழைப்பிதழில் மாஜிக்கு முக்கியத்துவம் இல்லைநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., காரசாரம்

அழைப்பிதழில் 'மாஜி'க்கு முக்கியத்துவம் இல்லைநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., காரசாரம்பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சி கூட்டத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதத்தால், கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு, நகராட்சி தலைவர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிப்பாளையம் நகராட்சி கூட்டம் மன்ற அரங்கில், நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டம் துவங்கியதும், 38 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதை தொடர்ந்து கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பிரச்னை குறித்து பேச அனுமதிக்கப்பட்டனர்.அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில், 'ஆவாரங்காடு நகராட்சி அரசு துவக்கப்பள்ளி, 50ம் ஆண்டு பொன்விழா அழைப்பிதழில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கடைசியில் கீழே போட்டுள்ளனர். இப்பள்ளிக்கு, 30 ஆண்டுக்கு மேலாக எவ்வளவு வளர்ச்சி திட்டங்களை தங்கமணி செய்துகொடுத்துள்ளார்' என, பேசினார். இதற்கு, தலைவர் செல்வராஜ், 'பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இப்படி செய்து விட்டனர். அழைப்பிதழை மாற்றச்சொல்லி விட்டேன்' என, தெரிவித்தார்.இதைக்கேட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர் சம்பூரணம், 'தகுதியில்லாதவர்களை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக போட்டால் இப்படி தான் நடக்கும்' என, தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., பெண் கவுன்சிலர் மங்களம், 'எப்படி நீங்கள் இதை சொல்லலாம்' எனக்கேட்டு, அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களை இடையே காரசார விவாதம் நடந்துகொண்டிருந்தது. இதனால், தலைவர் செல்வராஜ், 'கூட்டம் முடிந்துவிட்டது' என, அறிவித்து விட்டு வெளியேறினார். இதையடுத்து, துணைத்தலைவர், கமிஷனர், அதிகாரிகள் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்களும் வெளியேறினர். ஆனால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டும் எனக்கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், மாலையில் போராட்டத்தை கைவிட்டு அவர்களும் வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ