ரேஷன் தராசுடன் பி.ஓ.எஸ்., மிஷின் இணைப்பு; எடை போடுவதில் தாமதத்தால் நுகர்வோர் விரக்தி
ராசிபுரம்: ரேஷன் கடைகளில் மின்னணு தராசுடன், பி.ஓ.எஸ்., மிஷினை இணைத்துள்ளதால், எடை போடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நுகர்வோர் விரக்தியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. ரசீதை கையால் எழுதுவதை மாற்றி, பி.ஓ.எஸ்., மிஷின், எலக்ட்ரானிக் தராசு ஆகியவை கொண்டு வந்தனர். இதிலேயே ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விபரம் உள்ளிட்டவை தெரிந்துகொள்ள முடியும். மேலும், பயனாளிகள் விரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி வந்தனர். இதில் வயதானவர்களின் விரல் ரேகை சரியாக பதிவாகாததால் சிரமப்பட்டு வந்தனர். இதை தவிர்க்க கண்விழி பதிவு மிஷினை இணைத்தனர். மேலும், வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்கும் வசதி, வாங்கிய பொருட்கள் குறித்து எஸ்.எம்.எஸ்., வசதி ஆகியவை கொண்டுவரப்பட்டன. இவைகள் மூலம் எளிதாகவும், வேகமாகவும் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்க முடிந்தது. தற்போது, எலக்ட்ரானிக் தராசுடன், பி.ஓ.எஸ்., மிஷினை இணைக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தராசுடன் பி.ஓ.எஸ்., மிஷினை இணைப்பதால் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுவதாக நுகர்வோர் விரக்தியுடன் தெரிவித்தனர். பழைய முறையில், 35 கிலோ அரிசியை ஒரே முறையில் எலக்ட்ரானிக் தராசில் எடை போட்டு வழங்க முடியும். ஆனால், தற்போது பி.ஓ.எஸ்., மிஷினை இணைத்ததால், ஒருமுறைக்கு அதிகபட்சம், 15 கிலோ தான் எடை போட முடியும். இதனால், 35 கிலோ அரிசியை, மூன்று முறை எடைபோட வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி பழைய முறையில் ரசீது போட்டுவிட்டு எடைபோட்டு வழங்குவர். குறைவான கார்டுள்ள கடைகளில், விற்பனையாளர் தான் எடையும் போட வேண்டும்.ஆனால், தற்போது எடைபோட்டு சரியாக, 10 கிலோ நிறுத்திய பிறகு தான், பி.ஓ.எஸ்., மிஷினில் பில் போட முடியும். அதுவும் விற்பனையாளர் மட்டும் உள்ள கடைகளில் மிகவும் காலதாமதமாகிறது. முன்பு, ஒருநாளில், 50 பில்கள் போட்ட கடையில் தற்போது, 30 பில் வரை தான் போட முடிகிறது. இதனால், நீண்ட நேரம் காத்திருக்கும் நுகர்வோர்கள் விரக்தியடைந்துள்ளனர்.