உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர்வுக்கு மாணவர்கள் தயாராக நாமக்கல் அரசு பள்ளியில் கவுன்டவுன் துவக்கம்

தேர்வுக்கு மாணவர்கள் தயாராக நாமக்கல் அரசு பள்ளியில் கவுன்டவுன் துவக்கம்

தேர்வுக்கு மாணவர்கள் தயாராக நாமக்கல் அரசு பள்ளியில் 'கவுன்டவுன்' துவக்கம்நாமக்கல் : நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் அறிந்து, அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வாய்ப்பாக, 'கவுன்டவுன்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வு, பிளஸ் 2விற்கு, வரும் மார்ச், 3; பிளஸ் 1 வகுப்பிற்கு, மார்ச், 5; பத்தாம் வகுப்பிற்கு, மார்ச், 28ல் துவங்குகிறது. முன்னதாக, விரைவில் செய்முறை தேர்வும் துவங்க உள்ளது. தேர்விற்கு மாணவ, மாணவியரை தயார் செய்யும் வகையில், பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, முக்கிய வினாக்கள் தயார் செய்யப்பட்டு, அவ்வப்போது திருப்புத்தேர்வும் நடத்தப்பட்டு, மாணவர்களின் முன்னேற்றம் கண்டறியப்பட்டு வருகிறது.இதற்கிடையே, பொதுத்தேர்வு நாட்களை அறிந்து கொள்ளும் வகையிலும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'கவுன்டவுன்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் மாணவர்கள், பொதுத்தேர்வு நாளை அறிந்து கொள்வதுடன், நாள் நெருங்க நெருங்க தங்களை தயார்படுத்திக்கொண்டு, தேர்வை எதிர்கொள்ள வாய்ப்பாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற தேர்வு, 'கவுன்டவுன்' கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கு எளிதாக இருப்பதுடன், பயம் இல்லாமல் தேர்வு எழுத துாண்டுகோலாகவும் உள்ளது. இந்த அறிவிப்பு பலகையை தினமும் மாணவர்கள் தவறாமல் நின்று பார்த்து செல்கின்றனர்.செய்முறை தேர்வு 7ல் தொடக்கம்நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று செய்முறை தேர்வுக்கான ஆயத்த கூட்டம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கற்பகம் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, செய்முறை தேர்விற்கான ஆணையை, தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், ''செய்முறை தேர்வு நேர்மையாகவும், எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல், அரசு விதிமுறைக்கு உட்பட்டு சிறப்பாக நடத்த வேண்டும்,'' என்றார்.நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, வரும், 7ல் தொடங்கி, 14 வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, வரும், 15ல் துவங்கி, 21 வரையும் நடக்கிறது. இந்த செய்முறை தேர்வு, 148 மையங்களில் நடக்கிறது. அதில், பிளஸ் 2வில், 14,042 பேர், பிளஸ் 1ல், 14,569 கலந்துகொள்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சிவா, பள்ளி உதவி ஆய்வாளர் பெரியசாமி, தலைமையாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ