உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாயக்கழிவு கலப்பால் திருமணிமுத்தாற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

சாயக்கழிவு கலப்பால் திருமணிமுத்தாற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

மல்லசமுத்திரம் மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்று தண்ணீரை பயன்படுத்தி, சுற்று பகுதிகளில் உள்ள பல நுாறு ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில், நெல், பருத்தி, மல்லி, கரும்பு, சோளம் உள்ளிட்ட முக்கிய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சேலம் மாவட்ட பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றி விட்டனர். இந்த சாயக்கழிவுநீர், திருமணிமுத்தாற்றில் கலந்து நிறம் மாறின. இதனால், நேற்று முன்தினம் ஆற்றிலுள்ள மீன்கள் மயக்கமடைந்த நிலையில், வாயை பிளந்தபடி துடித்துக்கொண்டே சென்றன. நேற்று காலை முதல், அந்த மீன்கள் அனைத்தும் கொத்து கொத்தாக செத்து மிதந்து வருகின்றன. இதன் காரணமாக, ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.சாயக்கழிவுநீர் ஆற்றில் கலந்துள்ளதால், தண்ணீரின் தன்மை கெட்டு விஷத்தன்மையாக மாறியுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊற்று மூலம் அருகிலுள்ள கிணறுகளிலும் சாயக்கழிவுநீர் சென்றுள்ளதால், அங்கும் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி, சாயக்கழிவு நீரை ஆற்றில் கலக்காத வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ